பத்தினம்திட்டா மாவட்டத்தில் பெய்யும் கனமழை காரணமாக பம்பை நதியில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்.
குமுளி: கேரளத்தில் பெய்துவரும் கனமழையால் சபரிமலையில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக, பம்பை ஆற்றுப் பாலத்தின் குறுக்கே கயிறு கட்டி தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, சபரி மலைக்கு பக்தர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை ஜூன் 4-ல் தொடங்கி, 2 நாட்களிலேயே வலுவிழந்தது. இதனால், அங்கு மழையின்றி வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்தது. இந்நிலையில், கடந்த 2 நாட்களாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.
இதனால், மலப்புரம், வயநாடு உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கையும், இடுக்கி, பத்தினம்திட்டா, எர்ணாகுளம், பாலக்காடு உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கையும் அறிவிக்கப்பட்டுள்ளது. பத்தினம்திட்டாவில் பெய்து வரும் கனமழையால் சபரிமலை பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், இதன் முகத்துவாரமான புலாச்சிமலையில் மழை தொடர்ந்து பெய்வதால், நீரின் அளவு அதிகரித்து கொண்டே செல்கிறது.
சபரிமலையின் அடிவாரப் பகுதியில் இரண்டு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே, பாதுகாப்பு காரணங்களுக்காக பம்பை ஆற்றுப் பாலத்தின் நுழைவுப் பகுதிகளில் கயிறு கட்டி தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலை பொறுத்தளவில், நிறைபுத்தரிசி வழிபாட்டுக்காக நாளை (ஞாயிறு) மாலை கோயில் நடை திறக்கப்பட உள்ளது. இதற்காக, ஏராளமான ஐயப்ப பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.
இதற்காக பக்தர்கள் ஞாயிறு, திங்களில் பம்பையை கடந்து சபரிமலை செல்ல இருந்த நிலையில், கனமழையால் அபாயகரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பக்தர்கள் வழிபாட்டுக்குச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.