இடம்: வேலூர்

 

படம்: சி.வெங்கடாஜலபதி

தமிழகம்

வானிலை அலர்ட்: தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மிக கனமழை, 15 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

வடகிழக்கு பருவமழை வியாழக்கிழமை தொடங்க வாய்ப்பு

ச.கார்த்திகேயன்

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை (அக்.15) தொடங்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் நாளை டெல்டா உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்மேற்குப் பருவமழை நாட்டின் மீதமுள்ள பகுதிகளிலிருந்து நாளை (அக்.15) முழுவதுமாக விலகுவதற்கான சூழல் உருவாகி வருகிறது. அதே நேரத்தில் வடகிழக்குப் பருவமழை தென்னிந்தியாவின் தென்பகுதிகளில் தொடங்குவதற்கான சாதகமான நிலை காணப்படுகிறது.

மேலும், மத்திய கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் சுமார் 4.5 கிமீ உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் சுமார் 1.5 கிமீ உயரம் வரை ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியிலிருந்து ஒடிசா கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள் வரை, மன்னார் வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் வழியாக சுமார் 1.5 கிமீ உயரம் வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.

இவை காரணமாக தமிழகத்தில் நாளை (அக்.15) நீலகிரி, கோவை, தேனி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, இதர மாவட்டங்களான கடலூர், தென்காசி, கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, சேலம், திருச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில கனமழையும் பெய்யக் கூடும். இதர தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

16-ம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, கடலூர மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், இதர தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

17-ம் தேதி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, திருப்பூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, டெல்டா மாவட்டங்கள், கடலூர், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், இதர தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும். 18-ம் தேதி நீலகிரி, கோவை மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், இதர தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரையில் 5 செமீ, ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன், விருதுநகர், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டியில் தலா 4 செமீ, புதுச்சேரி, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், கன்னியாகுமரி மாவட்டம் பாலமோரில் தலா 3 செமீ மழை பதிவாகியுள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT