ஐ.மகேந்திரன், டி.சரவணக்குமார், விஜய் மகாலிங்கம், அபிராமி, பி.அய்யப்பன்

 
தமிழகம்

உசிலம்பட்டி தொகுதியில் அனல் பறக்கும் தேர்தல் களம்: 37 ஆண்டுக்கு பிறகு கரை சேருமா காங்கிரஸ்?

சுப.ஜனநாயக செல்வம்

மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதியில் பலமுனை போட்டி நிலவி வந்தபோதும், அதிமுக - காங்கிரஸ் இடையே பிரதான போட்டி நிலவுகிறது. 37 ஆண்டுகளுக்கு பிறகு இத்தொகுதியில் களமிறங்கும் காங்கிரஸ் கட்சி வெற்றிக்கனியை பறிக்குமா என்ற கேள்வி அக்கட்சியினரிடையே எழுந்துள்ளது.

மதுரை மாவட்டத்திலுள்ள 10 தொகுதிகளில் புறநகர் பகுதியில் முக்கியமான தொகுதி உசிலம்பட்டி. இத்தொகுதியில் உசிலம்பட்டி வட்டம், செல்லம்பட்டி ஒன்றியம், சேடபட்டி ஒன்றியம், உசிலம்பட்டி நகராட்சி, ஏழுமலை பேரூராட்சி ஆகிய பகுதிகள் அடங்கும்.

இத்தொகுதியில், இதுவரை நடந்த தேர்தல்களில் பார்வர்டு பிளாக் கட்சியே அதிக முறை வென்றுள்ளது. மூக்கையாத்தேவர் 5 முறையும், அவரது மகன் முத்துராமலிங்கம் ஒருமுறை சுயேச்சையாகவும் வென்ற தொகுதி இது.

          

திமுக கூட்டணியில் பார்வர்டு பிளாக் கட்சியில் வல்லரசு ஒருமுறை வென்றார். இத்தொகுதியில் இதுவரை திமுக நேரடியாக வெற்றிபெற்ற தில்லை. இங்கு அதிமுக 4 முறை வென்றுள்ளது. அதிமுக கூட்டணியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் பி.வி.கதிரவன் ஒருமுறை வென்றுள்ளார்.

2026 தேர்தலில் அதிமுக வேட்பாளராக ஐ.மகேந்திரன், திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக டி.சரவணக்குமார், சசிகலா கட்சி (அஇபுமமுக) சார்பில் பி.அய்யப்பன், தவெக சார்பில் விஜய் மகாலிங்கம், நாம் தமிழர் கட்சி சார்பில் அபிராமி ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.

அதிமுக சார்பில் போட்டியிடும் ஐ.மகேந் திரன் ஏற்கெனவே இத்தொகுதி எம்எல்ஏவாக இருந்துள்ளார். 2021 தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட்டு 3-ம் இடம் பிடித்தார். தற்போது அதிமுக, அமமுக கூட்டணியில் போட்டியிடுகிறார். தொகுதியில் நன்கு அறிமுகமானவர் என்பது இவரது பலமாக உள்ளது.

இத்தொகுதியில் காங்கிரஸ் கட்சி 37 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது போட்டியிடுகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக டி.சரவணக் குமார் களமிறங்கியுள்ளார்.

இவர், காங்கிரஸ் கட்சி பாரம்பரியத்தை சேர்ந்தவர். இத்தொகுதியில் இம்முறை திமுக நேரடியாக களமிறங்க வேண்டும் என்று அக்கட்சியினர் வலியுறுத்தி வந்தனர். திமுகவில் நகராட்சித் தலைவராக இருந்த எஸ்.ஓ.ராமசாமி, அவரது மகன் உசிலம்பட்டி திமுக ஒன்றியச் செயலாளர் தங்கப்பாண்டியன், திமுக நகர் செயலாளர் தங்கமலை பாண்டியன், வடக்கு ஒன்றியச் செயலாளர் அஜித்பாண்டி, மாநிலச் செயற்குழு உறுப்பினர் இளமகிழன் ஆகியோர் வாய்ப்பு கேட்டு காத்திருந்தனர்.

ஆானல், இத்தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஒதுக்கிவிட்டது. இதனால் திமுகவினர் அதிருப்தியில் உள்ளனர். அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 2021-ல் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற பி.அய்யப்பன், பின்னர் ஓபிஎஸ் அணியில் இணைந்தார். அவருடன் திமுகவில் சேர்ந்தவருக்கு சீட் வழங்கப்படவில்லை. இதனால், திமுகவிலிருந்து விலகி சசிகலாவின் அஇபுமமுக சார்பில் இத்தொகுதியில் போட்டியிடுகிறார்.

இவருக்கு ஆதரவாக சசிகலா நேரில் வந்து பிரச்சாரம் செய்ததையடுத்து, தனது ஆதரவாளர்களுடன் உற்சாகமாக களப் பணியாற்றி வருகிறார். தவெக சார்பில் திமுக முன்னாள் நகராட்சித் தலைவர் ராமசாமியின் சகோதரர் மகன் வழக்கறிஞர் விஜய் மகாலிங்கம் களம் காண்கிறார்.

அவர் திமுக ஆதரவு வாக்கு களையும், கணிசமான இளம் வாக்காளர்களின் வாக்குகளையும் கவரும் வகையில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னையைச் சேர்ந்த அபிராமி போட்டியிடுகிறார்.

இவர் பாரதிராஜா வின் உறவினர். இவரும் சொந்த பந்தங்களின் வாக்குகளையும், நாம் தமிழர் கட்சியின் வாக்குகளையும் பெற கடுமையாக உழைத்து வருகிறார்.

அதிமுக, காங்கிரஸ், சசிகலா கட்சி, தவெக, நாம் தமிழர் என பலமுனை போட்டி இத்தொகுதியில் காணப் பட்டாலும், தேர்தல் நெருக்கத்தில் களம் பிரதான கூட்டணிகளான அதிமுக, திமுக கூட்டணிகளுக்கு இடையே மாற வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

SCROLL FOR NEXT