சென்னை: தமிழகத்தில் சிறுபான்மையினர் நலனுக்காக அதிக திட்டங்களை செயல்படுத்தியது யார் என்பது குறித்து சட்டப்பேரவையில் தவெக, திமுக மற்றும் அதிமுக இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.
சட்டப்பேரவையில் நேற்று சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீது அமைச்சர் ஏ.எம்.ஷாஜகான் பதிலளித்துப் பேசும்போது, “வரலாற்றில் முதல்முறையாக சிறுபான்மையினர் நலத்துறையில் 20-க்கும் அதிகமான அறிவிப்புகளை ஒரே பட்ஜெட்டில் தவெக அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்புகள் கண்துடைப்புக்கான அறிவிப்புகள் அல்ல; அது சிறுபான்மையினர் சமூகத்தை கைதூக்கும் அறிவிப்புகள்” என்றார். அதைத்தொடர்ந்து நடைபெற்ற விவாதம் வருமாறு:
தமிமுன் அன்சாரி (மஜக): சிறுபான்மையின மக்களுக்கு கடந்த அதிமுக, திமுக ஆட்சிக் காலங்களில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அதிமுக ஆட்சியில்தான் ஹஜ் இல்லம் கட்டுவதற்கு ரூ.15 கோடி ஒதுக்கியது. அதை திமுக ரூ.40 கோடியாக உயர்த்தியது. அனைத்தையும் தாங்களே செய்ததாகக் கூறுவது ஆரோக்கியமான அரசியல் அல்ல. அமைச்சர்
நிர்மல்குமார்: திமுகவும், அதிமுகவும் சேர்ந்து ஆட்சி அமைக்க முயற்சித்ததால்தான் திமுக கூட்டணியில் இருந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வெளியே வந்துள்ளது. (இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்)
மெய்யநாதன் (திமுக): முஸ்லிம் மக்களுக்காக திமுக அரசு 3.5 சதவீத இடஒதுக்கீடு, பள்ளிவாசல்கள் புதுப்பிப்புக்கு ரூ.50 கோடி, கபருஸ்தான்களுக்கு நிதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. பட்டா இடங்களில் பள்ளிவாசல், தேவாலயங்கள் கட்ட 30 நாட்களுக்குள் அனுமதி வழங்கும் நடைமுறையையும் திமுகதான் கொண்டு வந்தது.
ஓ.எஸ்.மணியன் (அதிமுக): ரம்ஜான் நோன்புக் கஞ்சி தயாரிக்க 5,200 மெட்ரிக் டன் அரிசியை விலையில்லாமல் வழங்கியது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. மத்திய அரசு ஹஜ் மானியத்தை நிறுத்தியபோது, மாநில அரசே அதை முழுமையாக ஏற்று வழங்கியது. இவ்வாறு விவாதம் நடைபெற்றது.