

உயர் நீதிமன்றம் மதுரை கிளை
மதுரை: கல்வி நிலையங்களில் சாதி பாகுபாடு அகற்றுவது தொடர்பான நீதிபதி சந்துரு பரிந்துரைகளை முழுமையாக அமல்படுத்தக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் பர்வேஷ் முஷாரப், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் பள்ளி, கல்லூரிகளில் சாதி மற்றும் மதப் பாகுபாடற்ற சூழலை உருவாக்குவது தொடர்பான ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் குழு அளித்த பரிந்துரை அளித்தார்.
அதில், அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களின் பெயர்களிலிருந்து சாதிப் பெயர்களை நீக்குதல், தேவையற்ற சாதி சார்ந்த குறிப்புகளை நீக்குதல் உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் இடம் பெற்றுள்ளன.
இவை அரசால் ஏற்கப்பட்டதா, நிராகரிக்கப்பட்டதா என்பது தொடர்பாக அறிக்கை அளிக்கவும், அவற்றை காலக்கெடுவுக்குள் அமல்படுத்தவும் குறைதீர் அமைப்பு உருவாக்கவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.
மனுவை நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வு விசாரித்து, மனு தொடர்பாக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை செப். 9-க்கு தள்ளிவைத்தனர்.