| படம்: எம்.முத்துகணேஷ் |
தாம்பரம்: மாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்ற கவுன்சிலர்கள், தங்கள் வார்டுகளில் உள்ள பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர். தாம்பரம் மாநகராட்சி கூட்டம் மேயர் வசந்தகுமாரி தலைமையில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தில் துணை மேயர் காமராஜ், துணை ஆணையர் நாராயணன், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
கூட்டம் தொடங்கியதும், தமிழகத்தில் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்திய முன்னாள் திமுக ஆட்சிக்கும், தாம்பரம் மாநகராட்சியை உருவாக்கி ஜிஎஸ்டி சாலையில் புதிய மாநகராட்சி அலுவலகம் அமைக்க நடவடிக்கை எடுத்த முன்னாள் முதல்வர் ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை 2-வது மண்டலக் குழு தலைவர் ஜோசப் அண்ணாதுரை முன்மொழிந்தார்.
தொடர்ந்து 2020, 2021-ம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கான நிலுவை பில்களை வழங்குவது தொடர்பாக 9 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. நிறைவாக மொத்தம் 331 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
4-வது மண்டல தலைவர் காமராஜ், 5-வது மண்டல தலைவர் இந்திரன், 35-வது வார்டு சுயேட்சை கவுன்சிலர் சங்கீதா, 41-வது வார்டு திமுக கவுன்சிலர் கற்பகம், அதிமுக எதிர்க்கட்சி தலைவர் சங்கர், 26-வது வார்டு மதிமுக கவுன்சிலர் புஸிரா பானு தங்கள் வாட்டுகளில் உள்ள குடிநீர் தட்டுப்பாடு, நிலுவைப் பணிகள் குறித்து கூறினர்.
தனது வார்டு புறக்கணிக்கப்படுவதாக 50-வது வார்டு மமக கவுன்சிலர் யாக்கூப் வெளிநடப்பு செய்தார். சென்னையின் முக்கிய சாலைகளில் ஒன்றான வேளச்சேரி–தாம்பரம் உயர்சாலைக்கு, அசோக் சக்ரா விருது பெற்ற மறைந்த இந்திய ராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர் சூட்டப்பட உள்ளது.
இதற்கான தீர்மானத்தை தாம்பரம் மாநகராட்சி மன்றம் நிறைவேற்றியுள்ளது. 16 கிமீ நீளமுள்ள இந்த சாலையின் பெயர் மாற்றம், நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த அவரது வீரத்தையும் தியாகத்தையும் கவுரவிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.