

திருவனந்தபுரம்: கேரளாவில் ஒருங்கிணைந்த போதைப் பொருள் எதிர்ப்பு நடவடிக்கையின்போது 72 மணி நேரத்தில் 1,500-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
கேரளாவில் பள்ளி, கல்லூரி வளாகங்களை போதைப் பொருள் இல்லாத பகுதிகளாக மாற்ற புதிய அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, புதிய கல்வி ஆண்டு தொடங்குவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு, பள்ளி, கல்லூரிப் பகுதிகளில் போதைப்பொருள் கடத்துவோரை எதிர்பாராத நேரத்தில் பிடிப்பதற்கான ஒரு உத்தியை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா இறுதி செய்தார்.
இதன்படி,'ஆபரேஷன் தூஃபான்' என்ற பெயரில் ஒருங்கிணைந்த போதைப் பொருள் எதிர்ப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. இதில் வெறும் 72 மணி நேரத்தில் 1,500-க்கும் மேற்பட்ட வழக்குகளை பதிவு செய்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர். மேலும் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் கணிசமான அளவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஆபரேஷன் தூஃபான் தொடர்பான பிரச்சாரம் திருவனந்தபுரத்தில் உள்ள காட்டன் ஹில் பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் மாணவர்கள், பெற்றோர்கள், போலீஸ் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்றனர். இந்த அதிரடி நடவடிக்கைக்கு ஆதரவான பிரச்சாரங்கள் சமூக ஊடகத் தளங்களில் வைரலாக பரவின. களத்திலும் இணையத்திலும், இந்த நடவடிக்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் பொதுமக்களின் ஆதரவைப் பெற்றது.
காவல்துறை அதிகாரிகள் முறையான அறிவிப்புகளை தாண்டி சமூக ஊடகப் பக்கங்கள் மூலம் பொது மக்களின் உதவியை கோரினர். உள்ளூர் போதைப்பொருள் வியாபாரிகளைப் பற்றிய தகவல்களுக்காக மொபைல் மற்றும் வாட்ஸ்அப் எண்கள் அறிவிக்கப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட ஸ்மார்ட் போன்களை ஆய்வு செய்ததன் மூலம் டெல்லியில் சாமுவேல், பெங்களூருவில் எல்சினா ஆகிய 2 முக்கிய வெளிநாட்டு போதைப்பொருள் கடத்தல்கார்களும் கைது செய்யப்பட்டனர்.