பாஜக எம்எல்ஏ ஜான்குமார்
புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பாஜக எம்எல்ஏ ஜான்குமார் பேசும்போது, “மாநில அந்தஸ்து பெரிய பிரச்சினை. அது சீக்கிரம் கிடைத்துவிடும். புதுச்சேரிக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வேண்டும். முதலில் வருமானத்தை கூட்ட வேண்டும்” என தெரிவிக்க, விவாதம் ஏற்பட்டது. உடனே திமுக எம்எல்ஏ செந்தில்குமார், “முன்னாள் முதல்வர் நாராயணசாமியிடம் பேசுகிறார் போல; அதனால்தான் சிறப்பு மாநில அந்தஸ்து கேட்கிறார்” என்றார்.
அதற்கு பேரவையின் தற்காலிகத் தலைவர் அன்பழகன், “சிறப்பு மாநில அந்தஸ்து கிடைக்காது. முதலில் பாஜக மாநில அந்தஸ்து தர கொள்கை முடிவு எடுத்துள்ளார்களா? ஒருமித்த கருத்தாக மாநில அந்தஸ்த்தில் நிற்க வேண்டும்” என்றார்.
எம்எல்ஏ நேரு, “மாநில அந்தஸ்தை பாஜக உறுப்பினர் திசை திருப்புகிறார். போதிய வருவாய் புதுச்சேரிக்கு இருக்கிறது. தன்னிறைவாகதான் புதுச்சேரி இருக்கிறது. மாநில நிதி பங்கு நமக்கு கிடைக்க மாநில அந்தஸ்து தேவை” என்றார். உடனே எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம், “மாநில அந்தஸ்து இல்லை என்று மத்திய அரசு எப்போது கொள்கை முடிவாக சொன்னது?” என்றார்.
அதற்கு பேரவையின் தற்காலிகத் தலைவர் அன்பழகன், “பலமுறை மாநில அந்தஸ்து தரும் திட்டம் இல்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது. மத்தியில் ஆண்ட காங்கிரஸு்ம், ஆளும் பாஜகவும் மாநில அந்தஸ்து தருவதில் சுணக்கமாக இருக்கிறார்கள்” என்றார்.
அப்போது ஜான்குமார், “மாநில அந்தஸ்து பெற முதல்வர் டெல்லிக்கு செல்ல வேண்டும். நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும், பாஜக விரலை விட்டு ஆட்டுகிறது. ஆனால், நம் முதல்வரை ஏதும் செய்யாது. முதல்வர் ரங்கசாமி சாதாரணமானவர் இல்லை” என்றார்.
அப்போது தற்காலிகத் தலைவர் அன்பழகன் குறுக்கிட்டு, “பாஜக ஜம்பம் முதல்வர் ரங்கசாமியிடம் பலிக்காது என்று சொல்கிறீர்களா?” என்றார். அதற்கு ஜான்குமார், “முதல்வர் மீது பாஜக வைத்துள்ள மரியாதையைத்தான் குறிப்பிட்டேன்” என்றார்.
அந்த நேரத்தில் அமைச்சர் நமச்சிவாயம் குறுக்கிட்டு, “பேரவையின் தற்காலிகத் தலைவர் உறுப்பினரின் பேச்சை திசை திருப்புகிறார். பேரவைத் தலைவரை நான் வன்மையாக கண்டிக்கிறேன், பாஜக எம்எல்ஏ சொன்னது வேறு; நீங்கள் சொல்வது வேறு” என்றார்.
அதற்கு தற்காலிகத் தலைவர், “உங்கள் எம்எல்ஏ தான் பேசினார்” என்றார். உடனடியாக அமைச்சர் நமச்சிவாயம், “சபையை தவறாக பேரவைத் தலைவர் வழிநடத்தக் கூடாது” என்றார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இச்சூழலில் எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம் குறுக்கிட்டு, “பாஜக எம்எல்ஏ ஜான்குமாரின் செயல்பாட்டை விமர்சித்து கட்சி நடவடிக்கை எடுக்குமா?” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு, “எங்கள் கட்சி அதைப் பார்த்துக் கொள்ளும். எங்கள் கட்சி விஷயங்களை நாங்கள் பார்ப்போம்; நீங்கள் உங்கள் கட்சியை பார்க்கலாம்” என்று நமச்சிவாயம் தெரிவித்தார்.