சென்னை: தமிழக வட மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் மார்ச் முதல் மே மாதம் வரை வெப்ப அலை அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மார்ச் முதல் மே மாதம் வரையிலான வெப்பநிலை மற்றும் மழை தொடர்பான வானிலை கணிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு தீபகற்பத்தின் (வட தமிழகம், கடலோர தமிழகம்) பல பகுதிகளிலும், வடமேற்கு மற்றும் மேற்கு மத்திய இந்தியாவின் சில பகுதிகளிலும் மார்ச் முதல் மே 2026 வரையிலான காலகட்டத்தில் இயல்பை விட அதிகமான வெப்ப அலை நாட்கள் இருக்க வாய்ப்புள்ளது.
குறிப்பாக அதிகபட்சமாக 15 நாட்கள் வரை வழக்கத்தை விட அதிகமான வெப்ப அலை நாட்கள் நிலவ வாய்ப்புள்ளது. எனவே இந்த காலகட்டத்தில் போதுமான நீரை அருந்த வேண்டும். அதிக வெயில் இருக்கும் நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். வெப்ப அலையில் எளிதில் பாதிக்கப்படும் மக்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி, அவர்களை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மழை வாய்ப்பு குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. குமரிக்கடல் பகுதிகளிலிருந்து லட்சத்தீவு பகுதிகள் வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக நாளையும் (மார்ச் 2), நாளை மறுதினமும் மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். 4-ம் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களிலும், 5, 6 தேதிகளில் மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், 7-ம் தேதி தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழக உள் மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள், தமிழக கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.