படம்: நா.தங்கரத்தினம்

 
தமிழகம்

மதுரை மாநகராட்சி ‘குப்பை’ துயரத்துக்கு எப்போது விடிவு காலம் வரும்?

குப்பை சரியான நேரத்துக்கு அள்ளப்படாததால் சுகாதார சீர்கேடு

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மதுரை மாநகராட்சியில் குப்பையை அள்ள போதுமான வாகனங்கள் இல்லை. மேலும் இருக்கும் வாகனங்களும் பழுது, மாற்று ஓட்டுநர்கள் இல்லாதது போன்ற காரணங்களால் குடியிருப்புகள் முதல் தெருக்கள், சாலைகளில் சரியான நேரத்துக்கு குப்பை அகற்றப்படாமல் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மதுரை மாநகராட்சி 100 வார்டுகளிலும் 2023 நவம்பர் முதல் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள ‘அவர்லேண்ட்’ ஒப்பந்த நிறுவனம் ஒப்பந்தம் எடுத்துள்ளது.

ஒட்டுமொத்த குப்பையையும் அகற்றி, மாநகரை தூய்மையாக பராமரிப்பது ஒப்பந்தம் எடுத்த நிறுவனத்தின் பொறுப்பு. ஆனால், நிர்ணயித்த 916 டன் குப்பையை அகற்ற வைப்பதற்குள் தினமும் காலை முதல் மாலை வரை மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் படாதபாடு படுகிறார்கள். வாகனங்கள் பழுது, போதுமான வாகனங்கள் இல்லாததால் வீடுகள் முதல் தெருக்கள், சாலைகளில் குப்பையை சேகரித்து மாநகராட்சியால் உரக்கிடங் குக்கு அனுப்ப முடியவில்லை.

இந்நிலையில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த தி்ங்கட்கிழமை நடந்த மாநகராட்சி கூட்டத்தில், பொது இடங்களில் குப்பையை கொட்டுவோருக்கு ரூ.100 முதல் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதிருப்தியடைந்த ஒட்டுமொத்த கவுன்சிலர்கள், ஒரே குரலில், ‘‘முதலில் அபராதம் விதிக்கும் முன் நாம் சரியாக இருக்கிறோமா? என்று பார்க்க வேண்டும்.

தெருவில் குப்பைத் தொட்டி வைப்பதில்லை. வீடுகளுக்கு தினமும் குப்பை சேகரிக்க வருவதில்லை. அப்படியென்றால், குப்பையை எங்கே கொண்டு போய் கொட்டுவர்?. வீட்டிலா தேக்கி வைக்க முடியும்,’’ என்று எதிர்ப்பு தெரிவித்து, அந்த தீர்மானத்தை ரத்துசெய்ய வைத்தனர். மேலும் அவர்கள், ‘அவர்லேண்ட்’ நிறுவனத்துக்கு மீண்டும் தூய்மைப் பணி ஒப்பந்தம் வழங்கினால் உயிரை கொடுத்தாவது தடுப்போம், என்று அதிகாரிகளிடம் கொந்தளித்தனர்.

இதுகுறித்து மாநகராட்சி நகர்நலப் பிரிவு அதிகாரிகள் சிலர் கூறுகையில், ‘‘வாகனங்கள் காலை 6 மணிக்கு குப்பையை அள்ளும் பணியில் ஈடுபட வேண்டும். ஆனால், தாமதமாகச் செல்வதால் மாநகரில் சேரும் குப்பையை சரியான நேரத்துக்கு அகற்றி உரக்கிடங்குக்கு கொண்டு செல்ல முடியவில்லை. தினமும் 800 மெட்ரிக் டன் குப்பை மட்டும் அள்ளப்படுவதால் மீதமுள்ள குப்பை நகர் பகுதியில் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது,’’ என்றனர். இது தொடர்பாக பேசுவதற்கு ‘அவர்லேண்ட்’ அதிகாரியை தொடர்பு கொண்டபோது அவர் ஃபோனை எடுக்கவில்லை.

மறைமுகமாக உதவும் அதிகாரிகள்

கவுன்சிலர்கள் சிலர் கூறுகையில், ‘‘ஆணையர் கவுரவ்குமார், 3 மாதங்களுக்குப் பிறகு அவர்லேண்ட் நிறுவனத்துக்கு மீண்டும் ஒப்பந்தம் கொடுக்கப்பட மாட்டாது என்று உறுதி அளித்துள்ளார். ஆனால், சுகாதாரத்துறையில் பணிபுரியும் சில அதிகாரிகள், கடந்த காலத்தில் அவர்கள் பணிபுரிந்த மாநகராட்சிகளில் ‘அவர் லேண்ட்’நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி உள்ளனர். அந்த பழைய நட்பில், அந்நிறுவனத்துக்கு மறைமுகமாக உதவுகிறார்கள். கடந்த திமுக ஆட்சியில் அவர் லேண்ட் நிறுவனம் செல்வாக்குடன் இருந்ததாகச் சொல்கிறார்கள்.

ஆனால், கடந்த காலத்தில் அந்நிறுவனம் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தற்போது இல்லை. வீடுகளில் எடுக்கும் குப்பை, மயானம், பூங்கா பகுதிகளில் கொண்டு போய் கொட்டுகிறார்கள். குப்பை பிரச்சினையால் மக்களை எங்களால் தினமும் எதிர்கொள்ள முடியவில்லை,’’ என்றனர்.

SCROLL FOR NEXT