சென்னை: ‘தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்’ என்று டீன்களுக்கு சுகாதாரத் துறை செயலர் செந்தில்குமார் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவ வார்டு எதிரே தூங்கிக் கொண்டிருந்த ரவுடியை ஒரு கும்பல் வெட்டி படுகொலை செய்தது.
இந்த சம்பவம், அங்கு சிகிச்சை பெறும் நோயாளிகள், பார்வையாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் என அனைவரின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
இதைத்தொடர்ந்து, அனைத்து அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன்களிடமும் சுகாதாரத் துறை செயலர் செந்தில்குமார், நேற்று காணொலி வாயிலாக ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.
இதில் அவர் பேசியதாவது: அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். மருத்துவமனைகளில் உள்ள சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்து, அவை செயல்படும் தன்மையை உறுதிசெய்ய வேண்டும். தேவைப்பட்டால் கூடுதலாக, சிசிடிவி கேமராக்கள் பொருத்தி 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும்.
சேலம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், பார்வையாளர்களுக்கு, அடையாள அட்டை என்ற ‘டேக்’ அணிவித்து மருத்துவமனை வளாகத்துக்குள் அனுமதிப்பது சோதனை முறையில் நடந்து வருகிறது.
இதை அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் அமல்படுத்த வேண்டும். மருத்துவமனை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள் மற்றும் போலீஸாரை அழைத்து ஆய்வுக் கூட்டம் நடத்தி, பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். சந்தேகப்படும்படியாக யாராவது மருத்துவமனையில் சுற்றினால் உடனடியாக போலீஸாருக்கு தெரியப்படுத்தி, விசாரிக்க வேண்டும்.
கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தற்போது கட்டுமானப் பணி நடைபெறுகிறது. இரவிலும் பணி நடைபெறுவதால் பணிகளுக்கு ஆட்கள் உள்ளே வருவது வழக்கமானதாக இருந்துள்ளது.
இந்த விவகாரத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தனியார் நிறுவனத்தின் காவலர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இதுகுறித்து, சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் விளக்கம் கேட்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.