மதுரை: விவசாய பணிகளுக்கு தொழிலாளர்கள் கிடைக்காத நிலையில், வேலை உறுதியளிப்பு திட்டப் பணியாளர்களை விவசாயப் பணியில் ஈடுபடுத்துவது தொடர்பாக அரசுகள் பரிசீலிக்கலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சியைச் சேர்ந்த அம்பிகா, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: திருச்சி கால்நடை மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வருகிறேன். என்னை பணிநிரந்தரம் செய்ய வட்டார வளர்ச்சி அலுவலர் பரிந்துரை செய்தார். இருப்பினும் பணிநிரந்தரம் செய்யப்படவில்லை. என்னை பணிநிரந்தரம் செய்ய வட்டார வளர்ச்சி அலுவலர் பரிந்துரை செய்திருந்த போதிலும் அரசு அதனை பரிசீலிக்கவில்லை. இதனால், மருத்துவமனையில் உள்ள நிரந்தர காலிப்பணியிடத்தில் என்னை நியமிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
மனுவை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார். அரசு தரப்பில், மனுதாரர் நிரந்தர பணியிடத்தில் நியமிக்கப்படவில்லை. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தற்காலிக அடிப்படையில் பணியில் நியமிக்கப்பட்டார். அவருக்கு பணிநிரந்தரம் கோர உரிமையில்லை எனக் கூறப்பட்டது.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள் கிராமப்புற கால்நடை மருத்துவமனைகளில் பணிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர். இத்திட்டம் ஆண்டுக்கு நூறு நாள் குளங்கள் தூர்வாருதல், கால்வாய் தோண்டுதல், புதர்கள் அகற்றுதல் போன்ற கைகளால் செய்யப்படும் பணிகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இத்திட்டத்தில் ஒருவர் எப்படி பல ஆண்டுகளாக பணிபுரிந்தார் என்பது தெரியவில்லை.
தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியால் பல பணிகள் இயந்திரங்கள் மூலம் குறுகிய நேரத்தில் மேற்கொள்ளப்படுகிறது. இயந்திரங்கள் மூலம் செய்யக்கூடிய பணிகளில் மனிதர்களை பயன்படுத்துவதற்குப் பதிலாக வேளாண் துறையில் நிலவி வரும் தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க இந்த தேசிய வேலை உறுதித் திட்டத்தொழிலாளர்களை பயன்படுத்த முடியுமா என்பதை அரசு பரிசீலிக்க வேண்டும்.
விவசாயிகள் எதிர்கொள்ளும் தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்கவும், தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்யவும் அரசும் விவசாயிகளும் இணைந்து ஊதியச் சுமையை பகிர்ந்து கொள்ளும் வகையில் புதிய கட்டமைப்பை உருவாக்கலாம். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. புதிய திட்டத்தில் வேளாண் துறையில் நூறு நாள் வேலை திட்ட தொழிலாளர்களை பயனுள்ள வகையில் ஈடுபடுத்துவது குறித்து அரசு ஆலோசிக்க வேண்டும்.
பொதுநலத் திட்டங்களில் காலத்துக்கு ஏற்ற வகையில் மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டும். எனவே தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் கிராமப்புற பொருளாதாரத்தின் நலனை கருத்தில் கொண்டு மனிதவளத்தை திறம்பட பயன்படுத்துவதற்கான கொள்கை முடிவுகளை அரசு எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.