சென்னை: ஜெம் வீரமணிக்கு எதிரான பாலியல் வழக்கை சிபிஐக்கு மாற்றத் தேவையில்லை என மறுப்பு தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், வழக்கு தொடர்ந்த வாராகி இன்று சிறப்பு புலனாய்வுக் குழு முன்பு ஆஜராகி தன்னிடம் உள்ள ஆதாரங்களை வழங்க உத்தரவிட்டுள்ளது.
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைதான கிரானைட் தொழிலதிபர் ஜெம் வீரமணிக்கு எதிரான வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி யூடியூபரான வாராகி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ‘சென்னை முன்னாள் காவல் ஆணையர் அருணின் தலையீடு காரணமாகவே ஜெம் வீரமணிக்கு எதிரான பாலியல் வழக்கு தொடர்பான போலீஸ் விசாரணையில் சுணக்கம் ஏற்பட்டது.
பாதிக்கப்பட்ட சிறுமியை போலீஸார் உடனடியாக அடையாளம் காணவில்லை. சாந்தியிடமும் போலீஸார் சரியாக விசாரணை நடத்தவில்லை. இந்த விவகாரத்தில் ரூ.40 கோடி வரை லஞ்சப் பணம் கைமாறியுள்ளது. காவல் துறை உயர் அதிகாரிகள் உட்பட முக்கிய பிரமுகர்கள் பலருக்கும் தொடர்பு இருக்கலாம் என்பதால் இந்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும்’ என்று கோரியிருந்தார்.
நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
அதன் விவரம்:
நீதிபதி: சிறார்கள் தொடர்புடைய இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து 4 நாட்கள்தான் ஆகின்றன. அதற்குள் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு மூலமாக மனுதாரர் சுய விளம்பரம் தேட வேண்டாம். ‘தமிழக போலீஸார் மீது நம்பிக்கை இல்லை’ என்று மனுதாரர் கூறியுள்ளார். சிபிஐ அதிகாரிகள் ஆப்பிரிக்காவில் இருந்தா வரப்போகிறார்கள்?
காவல் துறை தரப்பில் ஆஜாரான மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன்: இந்த வழக்கு தொடர்பான ஆதாரங்கள், முக்கிய தகவல்களை வைத்திருப்பவர்கள் சிறப்பு புலனாய்வுக் குழு முன்பு ஆஜராகி, விசாரணை அதிகாரியிடம் அவற்றை வழங்கலாம் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கின் தற்போதைய நிலை குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு அக்.1-ம் தேதி (இன்று) அறிக்கை வெளியிட உள்ளது. சிறப்பு புலனாய்வுக் குழுவில் இருந்த ஐபிஎஸ் அதிகாரி கீதாஞ்சலி தனிப்பட்ட காரணங்களுக்காக விசாரணைக் குழுவில் இருந்து வெளியேறி உள்ளதால் அவருக்கு பதிலாக வேறு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
நீதிபதி: மனுதாரர் வாராகி தன்னிடம் இந்த வழக்கு தொடர்பான ஆதாரங்கள் இருந்தால் அதை அக்.1-ம் தேதி (இன்று) மாலை 3 மணிக்கு சிறப்பு புலனாய்வுக் குழு முன்பு ஆஜராகி வழங்க வேண்டும். ஜெம் வீரமணி வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கையை சிறப்பு புலனாய்வுக் குழு தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை அக்.7-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
3 பேர் ஜாமீன் மனு தள்ளுபடி: ஜெம் வீரமணி வழக்கில் கைதாகியுள்ள சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்மன் மற்றும் வீரமணியின் உதவியாளர் கணேசன் ஆகியோரது ஜாமீன் மனுக்களைத் தள்ளுபடி செய்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக கிரானைட் தொழிலதிபர் வீரமணி, சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்மன், வீரமணியின் உதவியாளர் கணேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதில் சாந்தி, மகேந்திர சிம்மன், கணேசன் ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை, நீதிபதி எஸ். பத்மா முன்னிலையில் நடந்தது.
அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சாய்குமரன், “மனுதாரர்களைப் போலீஸார் முறையாக கைது செய்யவில்லை. கைதான 24 மணி நேரத்துக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை. ஏற்கெனவே போலீஸார் தங்களது காவலில் எடுத்து விசாரணை நடத்தி விட்டனர் என்பதால் ஜாமீன் வழங்க வேண்டும்” என்று வாதிட்டார்.
அதற்கு அரசு தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் எஸ்.அனிதா, “குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டு தீவிரமானது என்பதால் இவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது. விசாரணை ஆரம்பக் கட்டத்தில் உள்ளது. ஜாமீனில் விடுவித்தால் வெளிநாடுகளுக்குத் தப்பி சென்று விடுவர். சாட்சிகளை மிரட்டி ஆதாரங்களை அழித்து விடுவார்கள்” என்று கடும் ஆட்சேபம் தெரிவித்தார். அதையடுத்து 3 பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.