மதுரை: அரசு போக்குவரத்து கழகத்தில் ஆளும் கட்சி தொழிற்சங்க நிர்வாகிகள் மாற்றுப்பணி என்ற பெயரில் வேலைக்குச் செல்லாமல் சம்பளம் பெறும் விவகாரத்தில் ஓட்டுநர், நடத்துநர்களை வேறு பணிகளுக்கு அனுப்பக் கூடாது என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் கனகசுந்தர் உயர் நீதிமன்றத்தில் 2019-ல் தாக்கல் செய்த மனுவில், அரசு போக்குவரத்துக் கழக மதுரை மண்டலத்தில் மட்டும் நூற்றுக்கணக்கான ஓட்டுநர், நடத்துநர்கள் தங்கள் அசல் பணியைச் செய்யாமல் நிர்வாகப் பிரிவில் பணியாற்றி வருகின்றனர்.
இதனால் பேருந்துகளை இயக்க போதுமான எண்ணிக்கையில் ஓட்டுநர், நடத்துநர்கள் இல்லாமல் இருப்பதால் பேருந்து இயக்கம் பாதிக்கப்படுதாகவும், ஓட்டுநர், நடத்துநர் பற்றாக்குறையை போக்க ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை நியமித்து அரசு போக்குவரத்து கழகத்துக்கு செலவீனத்தை அதகரித்துள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் என்.சதீஷ்குமார், எம்.ஜோதிராமன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் பிரபு ராஜதுரை, வழக்கறிஞர் ஏ.ராகுல் வாதிடுகையில், இந்த மனு முந்தைய அதிமுக அரசுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டாலும், இந்த ஆட்சியிலும் அதே நிலைமை தொடர்கிறது.
கடந்த ஆண்டு மே 15-ல் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் அளிக்கப்பட்ட தகவலில் 264 ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் நிர்வாகப் பணியில் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ஆளும் கட்சி சார்ந்த தொழிற்சங்கத்தினர் வேலை செய்யாமல் சம்பளம் பெறுகின்றனர் என்றனர்.
காலியிடங்கள் இருப்பதால்..
போக்குவரத்துக் கழகம் சார்பில், நிர்வாகப் பிரிவில் உதவியாளர் பதவியில் சில காலியிடங்கள் இருப்பதால், தகுதிவாய்ந்த ஓட்டுநர்கள், நடத்துநர்கள் இளநிலை உதவியாளர் பணிகளுக்கு நியமிக்கப்படுகின்றனர்.
இளநிலை உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட்டதும் அந்த ஓட்டுநர்கள், நடத்துநர்கள் அவர்கள் பணிக்கு திரும்ப அனுப்பப்படுவர். அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர், நடத்துநர்கள் இனிமேல் வேறு பணிகளில் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் எனக் கூறப்பட்டது.
பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: ஓட்டுநர், நடத்துநர்களை வேறு பணியில் ஈடுபடுத்தக் கூடாது என அரசாணையில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் அவர்களுக்கு வேறு பணிகள் வழங்கப்பட்டுள்ளன. பணியின்போது அவர்கள் ஊனமுற்றால், அவர்கள் பணி செய்யத் தகுதியற்றவர்கள் எனக் கண்டறியப்பட்டால் தவிர அவர்களை வேறு எந்தப் பணியிலும் நியமிக்கக் கூடாது.
எனவே ஓட்டுநர், நடத்துநர்கள் பணி தொடர்பான அரசாணையை தீவிரமாக அமல்படுத்த வேண்டும். எந்தக் கட்சியாக இருந்தாலும் ஆளும் கட்சியுடன் இணைக்கப்பட்ட எந்த வொரு தொழிற்சங்கத்தையும் சேர்ந்த ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு இனிமேல் மாற்றுப்பணி என்ற பெயரில் நிர்வாகப் பணி வழங்கக் கூடாது.
இந்த உத்தரவை மீறினால் அவமதிப்பு மனு தாக்கல் செய்ய தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு உரிமை வழங்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.