சென்னை: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் எதிர்த்துப் போட்டியிட்ட தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதியிடம் தோல்வியை சந்தித்தார்.
அதையடுத்து, திருப்பத்தூர் தொகுதிக்கான எம்எல்ஏ-வாக தேர்வாகியுள்ள சீனிவாச சேதுபதி சட்டப்பேரவையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பு மற்றும் சட்டப்பேரவை நடவடிக்கைகளில் பங்கேற்க தடை விதிக்கக்கோரியும், வேலூர் அருகில் உள்ள திருப்பத்தூர் தொகுதிக்கு மாற்றி அனுப்பப்பட்ட ஒரு தபால் வாக்கை மீட்டு திருப்பத்தூர் தொகுதி கணக்கில் சேர்க்க உத்தரவிடக்கோரியும் ஒரு ஓட்டில் வெற்றி வாய்ப்பை இழந்த திமுக வேட்பாளர் கே.ஆர். பெரியகருப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எல். விக்டோரியா கவுரி, என். செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய விடுமுறை கால அமர்வில் அவசர வழக்காக ஞாயிற்றுக்கிழமையான நேற்று விசாரிக்கப்பட்டது.
அப்போது முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோஹ்தகி, என்.ஆர்.இளங்கோ ஆகியோர், மனுதாரர் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளதாக திருப்பத்தூர் தொகுதி தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.
ஆனால் மறுவாக்கு எண்ணிக்கை முறையாக நடைபெறவில்லை. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதிக்கு பதிவான தபால் வாக்கு வேலூர் அருகே உள்ள திருப்பத்தூர் தொகுதிக்கு மாற்றி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்கை திருப்பத்தூர் தேர்தல் அதிகாரி நிராகரித்துள்ளார்.
இதுதொடர்பாக மனுதாரர் எழுப்பிய கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் முறையாக எந்தவொரு விளக்கமும் அளிக்கவில்லை. ஒருவேளை செல்லுபடியாகும் அந்த ஒரு தபால் வாக்கை மீண்டும் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதிக்கே அனுப்பியிருந்தால் இந்நேரம் இரு வேட்பாளர்களும் சம வாக்குகள் பெற்றிருப்பர்.
குலுக்கல் முறையில் வெற்றி வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பார், என வாதிட்டனர். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இதுபோன்ற சூழ்நிலைகளில் என்ன நடைமுறையை பின்பற்ற வேண்டும் என தேர்தல் ஆணையம் ஏதேனும் விதிமுறைகளை வகுத்துள்ளதா எனக்கேள்வி எழுப்பினர்.
அதற்கு பெரியகருப்பன் தரப்பு மூத்த வழக்கறிஞர்கள், இதுபோன்ற குளறுபடிகளை தவிர்க்க தேர்தல் ஆணையத்திடம் எந்த நடைமுறையும் இல்லை. இதுசம்பந்தமாக தேர்தல் ஆணையத்துக்கு பல புகார்கள் அளித்தும் எந்த பதிலும் இல்லை என்றனர்.
தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, வி.ராகவாச்சாரி ஆகியோர், தேர்தல் வெற்றியை எதிர்த்து தேர்தல் வழக்கு மட்டுமே தொடர முடியும்.
எம்எல்ஏ- என சட்டப்பூர்வமாக அறிவி்க்கப்பட்டவர் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கக்கூடாது என்றோ, சட்டப்பேரவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ளக்கூடாது என்றோ எப்படி தடை கோர முடியும்.
ஒரு வேட்பாளர் வெற்றி பெற்றவர் என அறிவிக்கப்பட்டு விட்டால் அவர் தனது கடமையை ஆற்ற அனுமதிக்க வேண்டும். சட்டப்பேரவை நடவடிக்கைகளில் பங்கேற்க தடை விதித்தால் அத்தொகுதியின் மக்கள் உரிமை தான் பாதிக்கப்படும், என்றனர்.
தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.தருண், இதுதொடர்பாக தேர்தல் வழக்கு மட்டுமே தொடர முடியும். தபால் வாக்குகள் தபால் துறை மூலம் அனுப்பப்படுவதில்லை. தபால் வாக்குகளைப் பெற தேர்தல் ஆணையம், துணை வட்டாட்சியர் அந்தஸ்தில் ஒரு அதிகாரியை நியமிக்கும். அந்த அதிகாரி தபால் வாக்குகளைப் பெற்று, சம்பந்தப்பட்ட தொகுதிகளின் தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பி வைப்பார்.
அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் இந்த நடவடிக்கைகளை கண்காணிப்பர் என்பதால் அதில் தவறு நடக்க வாய்ப்பு இருக்காது. ஒருவேளை ஒரு தொகுதியின் தபால் வாக்கு தவறுதலாக மற்றொரு தொகுதிக்கு மாற்றி அனுப்பி வைக்கப்பட்டால் அந்த சூழலில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து சட்டத்தில் எந்த விளக்கமும் இல்லை.
தேர்தல் வழக்கு முடிவுக்கு வரும் வரை அந்த தேர்தல் தொடர்பான ஆவணங்கள் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும், என்றார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஒரு தொகுதிக்கான தபால் வாக்கு வேறு ஒரு தொகுதிக்கு மாற்றி அனுப்பி வைக்கப்பட்டது குறித்து மனுதாரர் எழுப்பிய கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் உரிய விளக்கமளிக்காதது ஏன்? ஒரு வாக்கு வித்தியாசத்தில் மனுதாரர் தனது வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார்.
இப்போது தனக்கான ஒரு தபால் வாக்கை அதிகாரிகள் வேறு தொகுதிக்கு மாற்றி அனுப்பியுள்ளதாக மனுதாரர் குற்றம் சாட்டுகி்றார். ஒரு வாக்கு என்றாலும் அதற்கு பதிலளிக்க வேண்டிய கடமை தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது. எனவே இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் நாளைக்குள் (மே 11) விரிவாக பதிலளிக்க வேண்டும், என உத்தரவிட்டு விசாரணையை இன்றைக்கு தள்ளிவைத்துள்ளனர்.