தமிழகம்

ஆன்லைனில் மது விற்பனை செய்யும் முடிவை ரத்து செய்யக் கோரிய வழக்கு: அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: ஆன்லைன் மூலம் மது விற்பனை செய்யும் தமிழக அரசின் முடிவை ரத்து செய்யக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆன்லைன் மூலம் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை வாங்கும் வசதியை தொடங்கிவைத்து டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் சுற்றறிக்கை பிறப்பித்துள்ளார். இதனை ரத்து செய்யக் கோரியும், ஆன்லைன் மூலம் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கக் கோரியும், வழக்கறிஞர் சமூக நீதிப் பேரவையின் தலைவருமான கே.பாலு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

அதில், “ஆன்லைன் மூலம் மது வாங்கும் போது, 21 வயதுக்கு உட்பட்டவர்கள் மதுவகைகளை வாங்க முடியாது என்று டாஸ்மாக் நிறுவனம் தரப்பில் விளக்கம் அளித்தாலும், பெரியவர்கள் மது வாங்கிய ஆன்லைன் முகவரியை கொண்டு சிறுவர்களும் மது வாங்க வாய்ப்பு உள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.

ரேஷன் கடை, அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் கால் வலிக்க வரிசையில் நிற்கும் முதியோர், பெண்களுக்கு இதுபோல ஆன்லைன் பதிவுகள் செய்ய எந்த வசதியும் இல்லாத நிலையில், மது குடிப்பவர்களுக்கு தமிழக அரசு இந்த வசதியை செய்து கொடுத்துள்ளது.

இதனால் தமிழ்நாட்டில் மிகப்பெரிய தீங்கு ஏற்படும் என்பதால், ஆன்லைனில் மது விற்பனை செய்வது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும்; வழக்கில் தீர்வு காணப்படும் வரை அவற்றுக்கு தடை விதிக்க வேண்டும்” என்று மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, “மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா, அரசின் இந்த அறிவிப்பு இந்திய அரசியல் சாசனத்துக்கு விரோதமானது. மது விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றமும் கூறியுள்ளது.

அரசு நியமித்துள்ள குழுவின் விசாரணை வரம்பில், மது விற்பனை மூலம் வருவாயை அதிகரிப்பது குறித்து பரிந்துரைகளை வழங்கக் கோரியுள்ளது. ஆன்லைன் மூலம் மது விற்பனை செய்யும் விவகாரத்தில் எந்த வயது வரம்பும் நிர்ணயிக்கப்படாததால், இளைஞர்கள் எளிதில் மது வாங்க வாய்ப்புள்ளது என்பதால், ஆன்லைன் மது விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும்” என வாதிட்டார்.

மனுதாரர் தரப்பு வாதங்களை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், இந்த மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க, தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT