ரிதன்யா
சென்னை: வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட திருப்பூர் இளம்பெண் ரிதன்யாவின் நகைகளை குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் இருந்து மீட்டு, அவற்றை ரிதன்யாவின் தந்தையிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், வழக்கின் விசாரணை அதிகாரியை மாற்ற மறுத்துவிட்டது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் வரதட்சணை கொடுமை காரணமாக கடந்த 2025-ம் ஆண்டு ஜூன் மாதம், புதுமணப்பெண் ரிதன்யா விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த அவினாசி டிஎஸ்பி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில், வழக்கை முறையாக விசாரிக்கவில்லை என்பதால், எஸ்.பி. அந்தஸ்து அதிகாரியை புதிய புலன் விசாரணை அதிகாரியாக நியமித்து விசாரிக்கக் கோரி, ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை ராமசாமி மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு அரசியல் செல்வாக்கு உள்ளதால், விசாரணை அதிகாரி முறையாக விசாரிக்கவில்லை; குரலுடன் கூடிய கண்காணிப்பு கேமரா பதிவுகள், மொபைல்கள் உள்ளிட்ட மின்னணு ஆதாரங்களை ஆராயாமல், மெத்தனப்போக்குடன் காவல்துறை செயல்பட்டுள்ளது.
வரதட்சணையாக கொடுத்த நகைகள், காரை சட்டப்படி பறிமுதல் செய்யாததால், சட்ட ரீதியாக இல்லாமல் அவற்றை பெற்றுக் கொள்ளும்படி புலன் விசாரணை அதிகாரி நிர்பந்திக்கிறார்.
தனது தரப்பு சாட்சிகளை விசாரிக்காமல், முழுமையான விசாரணை நடத்தாமல், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதனால் எஸ்.பி. அந்தஸ்து அதிகாரியை புதிய விசாரணை அதிகாரியாக நியமித்து, விசாரணை நடத்தி, கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்” என மனுவில் கோரப்பட்டுள்ளது.
மேலும், வரதட்சணையாக கொடுத்த 100 பவுன் நகை மற்றும் 63 லட்ச ரூபாய் மதிப்பிலான வால்வோ கார் ஆகியவற்றை குற்றம்சாட்டப்பட்டவர்களிடமிருந்து மீட்டுத் தர வேண்டும் என்ற கோரிக்கையை அவினாசி நீதிமன்றம் நிராகரித்த உத்தரவை எதிர்த்தும் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த இரு வழக்குகளையும் விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், தற்கொலை செய்துகொண்டபோது ரிதன்யா அனுப்பிய ஆடியோ பதிவில் நகைகள் எங்கு உள்ளது என தெளிவாகக் கூறியிருந்தும் அவை மீட்கப்படவில்லை; எனவே குற்றம்சாட்டப்பட்டவர்களிடமிருந்து காவல்துறை நகைகளை மீட்க வேண்டும்; பின்னர் அவற்றை ரிதன்யாவின் தந்தையிடம் ஒப்படைக்க வேண்டும்” என உத்தரவிட்டார். மேலும், விசாரணை அதிகாரியை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை நிரகரித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.