

எடப்பாடி பழனிசாமி
சென்னை: “செவிலியர்கள் மீது காவல்துறை அரங்கேற்றியுள்ள அராஜகம் என்பது கொடூரத்தின் உச்சம். செவிலியர்கள் மீது வழக்கு பதியாமல், அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட்டு, அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அறவழியில் போராட்டம் நடத்திய செவிலியர்கள் மீது இன்றைய தவெக அரசின் காவல்துறை அரங்கேற்றியுள்ள அராஜகம் என்பது கொடூரத்தின் உச்சம்.
“பாசிசம், பாயாசம்” என்று ரைமிங் வசனங்கள் பேசிய முதல்வரின் கையில் இருக்கும் காவல்துறை, உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள செவிலியர்கள் மீது நடத்தியுள்ள பாசிச அக்கிரமத்தை எப்படி இந்த ரீல்ஸ் முதல்வர் நியாயப்படுத்துவார்?
ஆட்சிக்கு வருவதற்கு முன், இதே செவிலியர்கள் முன் நின்று உங்கள் கட்சி நிர்வாகிகள், இன்றைக்கு அமைச்சராக இருப்பவர்கள் பேசியது எல்லாம் நினைவில் இருக்கிறதா? ஆட்சிக்கு முன் ஒரு பேச்சு, ஆட்சிக்கு பின் அதற்கு மாறான செயல் என்பது தான் மாற்றமா? தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவுவது குறித்து மக்கள் பிரச்சினையை சுட்டிக்காட்டினால் கூட ஏற்றுக்கொள்ள மனமின்றி அவதூறுகளை அள்ளி வீசும் நபராக இருக்கிறார் இன்றைய சுகாதாரத் துறை அமைச்சர்.
தனது துறையைச் சார்ந்த செவிலியர்கள் போராடுவது குறித்து ஒரு வார்த்தை பேசினாரா? செவிலியர்களிடம் வந்து பேச்சுவார்த்தை நடத்துவதை விட அப்படி என்ன பெரிய வேலை இருக்கிறது இந்த அமைச்சருக்கு?
போராடும் இடத்தில் மின்சாரத்தை துண்டிப்பது, பேச்சுவார்தை எனக் கூறி அழைத்துச் சென்று கைது செய்வது என மிகவும் கீழ்த்தரமாக ஒரு போராட்டத்தை அணுகியுள்ள இன்றைய ஆச்சரியக்குறி அரசுக்கு எனது கடும் கண்டனம்.
கைது செய்யப்பட்டுள்ள செவிலியர்கள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட்டு, அவர்கள் மீது எந்த வழக்கும் பதியாமல் இருப்பதை உறுதி செய்து, ஜனநாயக ரீதியாக அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.