தமிழகம்

வீரமணி வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றக் கோரிய மனு வாபஸ்: வழக்கு தள்ளுபடி

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணிக்கு எதிரான வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய மனு திரும்பப் பெறப்பட்டதை அடுத்து, வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சி.ராஜசேகரன் தாக்கல் செய்த மனுவில், “குழந்தைகள் நல ஆர்வலர் ஒருவர் கொடுத்த பென் டிரைவின் அடிப்படையில், பாலியல் வன்கொடுமை தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால், புலன் விசாரணையில் பாதிக்கப்பட்ட சிறுமிகளை அடையாளம் காணமுடியவில்லை, இதனால் குற்றம்சாட்டப்பட்டவர்களை கைது செய்ய முடியவில்லை எனக்கூறி, இந்த வழக்கை முடித்து வைத்து, சிறப்பு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர்.

இதை ஏற்க மறுத்த சிறப்பு நீதிமன்றம், மேல் விசாரணைக்கு உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் ஜெம் வீரமணி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிகள் அடையாளம் காணப்பட்டு, வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன. இந்த வழக்கின் விசாரணை துரிதமாக நடந்து வந்தாலும், ஊடகங்கள் யூகத்தின் அடிப்படையில் இந்த வழக்கில் அரசியல் கட்சியினரையும், மற்றவர்களையும் தொடர்புபடுத்தி செய்திகள் வெளியிட்டு வருகின்றன. இது புலன் விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்துவதோடு, பொதுமக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படத்தக்கூடும்” என மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான வீரமணியுடன், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் உடன் இருப்பது போன்ற போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்றன. இது வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுடன் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருப்பது போன்ற சித்தரிக்கப்பட்டு வருகிறது என்பதால், அரசியலாக்கப்படும் இந்த வழக்கின் தீவிரத்தை கருதி, விசாரணையை சிபிஐ-க்கு அல்லது சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்ற வேண்டும். இந்த வழக்கு தொடர்பான போட்டோ மற்றும் வீடியோக்களை ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் வெளியிட தடை விதிக்க வேண்டும்” எனக் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஏற்கெனவே அரசு சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்துள்ளதால், இந்த மனுவை திரும்பப் பெற்றுக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, இந்த வழக்கை தாக்கல் செய்ய வேண்டிய நிர்பந்தம் என்ன? என கேள்வி எழுப்பினார்.

அதற்கு மனுதாரர் தரப்பில், வழக்கு தாக்கல் செய்த பிறகுதான், சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கை வாபஸ் பெற அனுமதித்து, தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT