

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற என்.ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ அசோக் ஆனந்த் முதல்வர் ரங்கசாமி முன்னிலையில், சட்டமன்ற உறுப்பினராக இன்று பதவிப் பிரமாணம் ஏற்றுக்கொண்டார்.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற பொதுதேர்தலில் முதல்வர் ரங்கசாமி தட்டாஞ்சாவடி மற்றும் மங்கலம் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதில் தட்டாஞ்சாவடி தொகுதியை முதல்வர் ரங்கசாமி ராஜினாமா செய்ததால் கடந்த அக்.6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் அசோக் ஆனந்த் (என்.ஆர் காங்கிரஸ்) 13,350 வாக்குகளும், விநாயகம் (காங்கிரஸ்)- 4,876 வாக்குகளும் பெற்ற நிலையில் 8,474 வாக்குகள் வித்தியாசத்தில் என்.ஆர் காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் வெற்றி பெற்றார்.
இதனைத் தொடர்ந்து புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில், முதல்வர் ரங்கசாமி முன்னிலையில் தற்காலிக சட்டப்பேரவை தலைவர் அன்பழகன் இன்று உறுதிமொழி வாசித்து பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் முன்னிலையில் புதிய எம் எல் ஏவாக அசோக் ஆனந்த் பதவி ஏற்றுக்கொண்டார்.
தொடர்ந்து முதல்வர் உட்பட அனைவரும் அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். அசோக் ஆனந்த் இத்துடன் மூன்றாவது முறையாக எம்எல்ஏவாக பதிவு ஏற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.