மதுரை: நூல் கொள்முதல் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையின்போது நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறியதாவது: நான் கடந்த வாரம் புத்தக வெளியீட்டு விழாவில் நகைச்சுவையாக பேசிய விஷயத்தை வைத்து மதுரை எம்பி சு.வெங்கடேசன், நான் எப்படி என்னுடைய பணிகளை செய்ய வேண்டும் என அறிவுறுத்துவதுபோல் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு ரயில் நிலையத்துக்கு சென்றபோது, உயர் ரக காரில், ஆடம்பர உடையில் வந்து ஒருவர் இறங்கினார். நான் யாரோ என நினைத்து அவரை பார்த்தபோது, அவர் எம்பி வெங்கடேசன் என தெரியவந்தது. அவர் முதல் வகுப்பு ஏசி பெட்டிக்கு செல்ல, நான் சாதாரண வகுப்பில் பயணித்தேன்.
ஒரு கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் இப்படி ஆடம்பரமாக இருக்கிறார். ஒரு கார்ப்பரேட் நிறுவன நிர்வாகிபோல உயர் ரக காரில் வந்திறங்கினார். புத்தக ராயல்டி தொகையை மட்டும் வைத்து இந்த மாதிரி வாழ முடியுமா என்பது எனக்கு தெரியாது. இவ்வாறு நீதிபதி கூறினார்.
சு.வெங்கடேசன் எக்ஸ் வலைதளத்தில் நேற்று முன்தினம் வெளியிட்ட பதிவில், ‘பெரியார் அறிவுலகத்தில் அகல்விளக்கு புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அலமாரிகளில் பாவங்கள் கழிய வேண்டுமென்றால், மகா பெரியவருடைய புத்தகங்களை அடுக்கி வைக்க வேண்டும்’ என்று நீதியரசர் ஜி. ஆர்.சுவாமிநாதன் கூறியுள்ளார்.
நூலகக் கொள்முதலில் நடந்திருப்பது ஊழல், அது சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். அதுதான் நீதியரசர்களின் வேலை. அதை விட்டுவிட்டு நடந்திருப்பது பாவம், அதிலிருந்து விடுபட புண்ணியம் தேடிக்கொள்ள வேண்டும் என்பது ஜோதிடர்களின் பணி. சட்டத்தின் ஞானத்துக்காக போற்றப்படும் அம்பேத்கரும், பகுத்தறிவின் ஞானத்துக்காக மதிக்கப்படும் பெரியாரும்தான் மகா பெரியவர்கள்’ என பதிவிட்டிருந்தார். இந்த பதிவில் சென்னையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பேசிய உரையின் வீடியோவும் இணைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.