மதுரை: தமிழகத்தில் உள்ள கோயில்கள் வகைப்பாடு தொடர்பான வரைவுப் பட்டியல் குறித்து பொதுமக்கள் ஆட்சேபனைகளை தெரிவிக்க 3 வாரம் அவகாசம் வழங்கி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த பெரியநம்பி நரசிம்ம கோபாலன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியருப்பதாவது: தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடைமுறையில் இருந்து வரும் பூஜைகள், வழிபாட்டு முறைகள் ஆகம விதிகளின்படி நடைபெறுகிறதா அல்லது தொன்றுதொட்டு வரும் மரபு மற்றும் பழக்கவழக்கங்களின் அடிப்படையில் நடைபெறுகிறதா என்ற அடிப்படையில் கோயில்களை வகைப்பாடு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழு முதல்கட்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் 7,461 கோயில்கள் மட்டுமே ஆகம விதிகளின்படி பூஜைகள் நடைபெறும் கோயில்களாகவும், 27,150 கோயில்கள் ஆகம முறையை பின்பற்றாமல் மரபு அல்லது பழக்கவழக்கத்தின் அடிப்படையில் பூஜைகள் நடைபெறும் கோயில்களாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இப்பட்டியலுக்கு பொதுமக்களிடம் இருந்து ஆட்சேபனைகள் மற்றும் கருத்துகள் கோரப்பட்டுள்ளன. கோயில்களை வகைப்படுத்த அமைக்கப்பட்டுள்ள குழுவில் ஆகம வல்லுநர்கள் இடம்பெற உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்து நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.முருகன் அமர்வு பிறப்பித்த உத்தரவு: உயர் நீதிமன்ற முதன்மை அமர்வு தமிழகத்தில் உள்ள ஆகம கோயில்களை கண்டறிய 5 பேர் கொண்ட குழு அமைக்க 2022-ல் உத்தரவிட்டது. ஒரு கோயில் குறிப்பிட்ட ஆகம விதிகளின்படி கட்டப்பட்டதாக கண்டறியப்பட்டால், அங்கு அர்ச்சகர்களை நியமிக்கும் முறை அதற்கேற்ப அமையும் என்பதால், கோயில் வகைப்பாடு மிக முக்கியமானதாகும். கோயிலின் ஆகம தன்மையைப் பற்றி அதன் அனைத்து அம்சங்களையும் முழுமையாக ஆய்வு செய்யாமல், எந்த முடிவுக்கும் வர முடியாது.
அரசு தரப்பில் தற்போது வரைவுப் பட்டியல் மட்டுமே வெளியிட்டிருப்பதாகவும், ஆட்சேபனைகள் பெறப்பட்ட பிறகு அவற்றை குழு ஆய்வு செய்து சட்டப்படி தகுந்த தீர்வு காணப்படும். தேவைப்படும்போது ஆகம வல்லுநர்களிடம் ஆலோசனை பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, கோயில் வகைப்பாட்டு வரைவுப் பட்டியல் தொடர்பாக பொதுமக்கள் ஆட்சேபனைகளை தெரிவிக்க 3 வார அவகாசம் வழங்கப்படுகிறது. அனைத்து தரப்பினரிடம் இருந்தும் ஆட்சேபனைகளை பெறும் வகையில் ஊடகங்களில் அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும். ஆட்சேபனைகளை நிவர்த்தி செய்யும் உத்தரவுடன், அது தொடர்பாக ஆலோசிக்கப்பட்ட ஆகம வல்லுநர்களின் கருத்தையும் இணைக்க வேண்டும். மனு முடித்து வைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.