தமிழகம்

வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய மனு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி

செய்திப்பிரிவு

மதுரை: புதுக்​கோட்டை மாவட்​டம் வேங்​கைவயல் சம்​பவம் தொடர்​பாக சிபிஐ விசா​ரணை நடத்த உத்​தர​விடக் கோரிய மனுவை உயர் நீதி​மன்​ற மதுரை அமர்வு தள்​ளு​படி செய்து உத்தரவிட்டுள்ளது.

ஆலங்​குடியைச் சேர்ந்த திரு​முரு​கன் என்​பவர், உயர் நீதி​மன்ற மதுரை அமர்வில் தாக்​கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: புதுக்​கோட்டை மாவட்​டம் வேங்​கைவயல் கிராமத்தில் 10,000 லிட்​டர் அளவுகொண்ட மேல்​நிலை நீர்த் தேக்​கத் தொட்​டி​ உள்ளது. இதில் மனித மலம் கலக்​கப்​பட்​டது.

இச்சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மலம் கலந்த தண்​ணீரை குடித்த பலருக்கும் வாந்​தி, வயிற்​றுப்​போக்கு ஏற்​பட்​டு பாதிக்கப்பட்டனர்.

இச்​சம்​பவம் தொடர்​பாக சிபிசிஐடி விசா​ரணைக்கு உத்​தர​விடப்​பட்​டது. ஓய்வுபெற்ற நீதிபதி எம்.சத்தியநாராயணன் தலைமையிலான ஆணையமும் விசாரணை நடத்தியது. எனினும் தவறு செய்தவர்களை கண்டறிய முடியவில்லை. எனவே, குடிநீர் தொட்​டி​யில் மலம் கலந்​தது தொடர்​பான வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனு​வில் கூறப்​பட்​டிருந்​தது.

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்​.ஏ.தர்​மா​தி​காரி, சி.​வி.​கார்த்​தி​கேயன் அமர்​வில் நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அரசுத் தரப்​பில், சிபிசிஐடி விசா​ரணையை முடித்து நீதி​மன்​றத்​தில் குற்​றப்​பத்​திரிகை தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது என தெரிவிக்​கப்​பட்​டது. பின்​னர் தலைமை நீதிப​தி, வேங்​கைவயல் வழக்​கில் உரிய நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது. விசா​ரணை முடிக்​கப்​பட்டு நீதி​மன்​றத்​தில் குற்​றப் பத்​திரி​கை​யும் தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது. எனவே சிபிஐ விசா​ரணைக்கு மாற்ற வேண்​டிய​தில்​லை, மனு தள்​ளு​படி செய்​யப்​படு​கிறது என உத்​தர​விட்​டார்.

SCROLL FOR NEXT