சென்னை: டாஸ்மாக் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான டாஸ்மாக் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கரூரைச் சேர்ந்த கார்த்திக் என்பவர், ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு, நீதிபதி லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, ‘கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக்கை லஞ்ச ஒழிப்புத் துறையினர், ஏற்கெனவே காவலில் எடுத்து விசாரணை நடத்திவிட்டனர்.
வழக்கு தொடர்பான ஆவணங்களையும் ஏற்கெனவே பறிமுதல் செய்துவிட்டனர். இந்த வழக்கின் ஒருவர் தலைமறைவாக இருக்கிறார் என்பதற்காக, கார்த்திக்கை நீண்ட நாட்கள் சிறையில் அடைத்து வைத்திருக்க வேண்டியது இல்லை என்பதால் ஜாமீன் வழங்க வேண்டும்’ என வாதிட்டார்.
காவல் துறை தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்குரைஞர் ஜான் சத்யன், ‘விசாரணை ஆரம்பக் கட்டத்தில் உள்ளது. விசாரணை தொடங்கி 25 நாட்கள் ஆன நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான கார்த்திக்குக்கு எதிராக ஏராளமான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
செந்தில் பாலாஜியை விட செல்வாக்கு மிகுந்த இவருக்கு ஜாமீன் வழங்கினால், வழக்கில் வாக்குமூலம் அளிக்க சாட்சிகள் அஞ்சுவர் என்பதால் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது’ என வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கார்த்திக்கின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தார்.
இன்று வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி வி.லட்சுமி நாராயணன், டாஸ்மாக் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.