சென்னை: தமிழ்நாடு அரசு வேளாண் துறையில் முறையாக பதவி உயர்வு வழங்கவில்லை என கூறி, ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளான அதிகாரி தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் வேளாண்மைத் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற கே.சேட் முகமது தாக்கல் செய்திருந்த வழக்கில், 1983-ம் ஆண்டில் வேளாண் அதிகாரியாக பணியில் சேர்ந்த நிலையில், 1991ல் தனக்கு எதிராக குற்றக்குறிப்பாணை பிறப்பிக்கப்பட்டு, அதன் தொடர்ச்சியாக நடத்தபட்ட விசாரணையின் முடிவில், 2 ஆண்டுகளுக்கான ஊதிய உயர்வை நிறுத்திவைத்து, 1997-ம் ஆண்டில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறியுள்ளார்.
2000-ம் ஆண்டு ஜூன் மாதம் தண்டனைக் காலம் முடிந்த நிலையில், 2001-ம் ஆண்டு ஜனவரியில் தான் மூத்த அதிகாரிக்கான பதவி உயர்வு கொடுக்கப்பட்டதால், உரிய முறையில் பணி உயர்வு வழங்கக் கோரிய மனுவை தனி நீதிபதி தள்ளுபடி செய்த உத்தரவை ரத்து செய்து, உரிய பணி மற்றும் பணப் பலனைகளை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இந்த மேல்முறையீடு வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஹாஜா நசிருதீன் ஆஜராகி, தனக்கு 1993-ம் ஆண்டில் இருந்து பதவி உயர்வு வழங்கும்படி ஏற்கனவே மனுதாரர் வழக்கு தொடர்ந்ததாகவும், அந்த விவகாரம் இரு நீதிபதிகள் அமர்வு வரை விசாரிக்கப்பட்டு, 2001ல் இருந்து பதவி உயர்வு சரியா என முடிவெடுக்கப்பட்டதாகவும், அதே விவகாரத்தில் மீண்டும் வழக்கு தொடர்வதை அனுமதிக்கக்கூடாது என வாதிட்டார்.
வாதங்களை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், முடிவு எட்டப்பட்ட ஒரு விவகாரம் தொடர்பாக இரண்டாவது முறை வழக்கை மீண்டும் நடத்துவதில் எந்த தகுதியும் இல்லை என கூறி, சேட் முகமதுவின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.