பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதி

 

கோப்புப் படம் 

தமிழகம்

பள்ளிக்கரணை சதுப்புநில வழக்கு: உச்ச நீதிமன்றத்தை நாடுமாறு கிரெடாய்க்கு ஐகோர்ட் உத்தரவு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைச் சுற்றி ஒரு கிலோ மீட்டர் பரப்புக்கு கட்டுமானங்களுக்கு தடை விதித்ததை எதிர்த்த வழக்கில், உச்ச நீதிமன்றத்தை அணுகும்படி, கிரெடாய் உள்ளிட்டோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக்கரணை சதுப்பு நிலம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரணை மேற்கொண்ட தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றி ஒரு கிமீ சுற்றளவுக்கு எந்தவொரு கட்டுமானங்களுக்கும் ஒப்புதல் வழங்கக்கூடாது என தமிழக அரசுக்கு கடந்தாண்டு செப்டம்பரில் உத்தரவிட்டிருந்தது.

அந்த உத்தரவுப்படி சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சிஎம்டிஏ), பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதிகளைச் சுற்றி சுமார் ஒரு கிமீ சுற்றளவுக்கு எந்தவொரு கட்டுமானங்களுக்கும் அனுமதி வழங்க முடியாது என கடந்த 2025 அக்டோபரில் உத்தரவிட்டது.

இந்த உத்தரவால் பள்ளிக்கரணை பகுதிகளை சுற்றியுள்ள பகுதிகளில் அடுக்குமாடி கட்டுமானப்பணிகள் முழுமையாக ஸ்தம்பித்துள்ளதாகக்கூறி ரியல் எஸ்டேட் நிறுவனங்களி்ன் கூட்டமைப்பான கிரெடாய் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் அமர்வு விசாரித்தது.

எந்தவித அறிவியல் பூர்வ ஆய்வும் மேற்கொள்ளாமல், சதுப்பு நிலத்தை சுற்றி ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு கட்டுமானங்கள் மேற்கொள்ளக் கூடாது என பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

கடந்த 7 மாதங்களாக கட்டுமானப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. பசுமைத் தீர்ப்பாய உத்தரவின் காரணமாக கிட்டத்தட்ட 1 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்துவிட்டு, மீண்டும் விசாரணை நடத்த தீர்ப்பாயத்துக்கு உத்தரவிட வேண்டும் என கிரெடாய் தரப்பில் வாதிடப்பட்டது.

மாநில சதுப்பு நில ஆணையம் தரப்பில், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைச் சுற்றியுள்ள பகுதியில் இடைக்கால பாதிப்பு மண்டலம் வரையறுக்கும் வகையில், 36 குறிப்பிட்ட சர்வே எண்களில் உள்ள 128.19 ஹெக்டேர் பரப்பு அடையாளம் காணப்பட்டுள்ளது என்றும், இதில் தனியார் பட்டா நிலங்கள் விலக்கி வைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தனர். இன்று, இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், சதுப்பு நிலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால், இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை அணுகும்படி, கிரெடாய் உள்ளிட்ட மனுதாரர்களுக்கு உத்தரவிட்டனர்.

மேலும், சதுப்பு நிலத்தின் எல்லையை வரையறை செய்யும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என தமிழ்நாடு மாநில சதுப்பு நில ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், கிரெடாய் உள்ளிட்டோர் தாக்கல் செய்திருந்த வழக்குகளை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT