திருப்பத்தூரில் பாஜக பயிலரங்கத்தில் பேசும் ஹெச்.ராஜா

 
தமிழகம்

“இப்ப இல்லன்னா எப்பவுமே இல்ல ராஜா” - சொல்கிறார் ஹெச்.ராஜா

செய்திப்பிரிவு

தமிழகத்தில் வரும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறாவிட்டால், எப்போதுமே வெற்றி பெற முடியாது என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் பாஜக சார்பில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான பயிலரங்கம் மற்றும் மாநாடு நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஹெச்.ராஜா பேசியதாவது: சுதந்திரம் அடைந்தது முதல் 10 முறை எஸ்.ஐ.ஆர் நடத்தப்பட்டு உள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் எஸ்.ஐ.ஆர் நடந்தபோது பாஜக எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஆனால், இப்போது நடக்கும் எஸ்.ஐ.ஆர் -க்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு போலி வாக்காளர்கள் நீக்கப்படலாம் என்ற அச்சமே காரணம். இதில் 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எஸ்.ஐ.ஆர் -க்கு விளக்கம் தெரியாத துணை முதல்வர் உதயநிதி எதிர்ப்புத் தெரிவிக்கிறார். கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு வலுவான தொகுதிகளில் நமக்கு ஆதரவு வாக்குகள் நீக்கப்பட்டன. வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர்கள் விடுபட்டு உள்ளதா என்பதைப் பார்த்து, இல்லாவிட்டால் சேர்க்க வேண்டும்.

தமிழகத்தில் திமுக ஆட்சி மீதான எதிர்ப்பு மக்களிடையே அதிகமாக உள்ளது. அமைச்சர்களை மக்கள் தெருவில் நிற்க வைத்து கேள்வி கேட்க தொடங்கி உள்ளனர். வரும் தேர்தலில் தமிழகத்தில் வெற்றி பெறவில்லை என்றால், தேசிய ஜனநாயக கூட்டணி எப்போதும் வெற்றி பெற முடியாது.

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற அரசு அனுமதி தராததால் 49 கிராம மக்கள் ஒன்று சேர்ந்து உள்ளனர். பெரும்பான்மை இந்துக்கள் மற்றும் முருகனுக்கு திமுகவினர் எதிரிகள் என்பதை நாம் வீடு வீடாக கொண்டு சேர்க்க வேண்டும். திமுக அரசின் 55 மாத ஆட்சியில் 6,500 படுகொலைகள் நடந்துள்ளன. சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுக்கு போதை முக்கிய காரணமாக உள்ளது. தமிழகத்தில் 1967 -ல் இருந்து பள்ளி, கல்லூரிகளில் சாதி ரீதியிலான மோதல்கள் நடப்பது திராவிட மாடலின் தோல்வி.

பிஹாரில் லாலு பிரசாத் குடும்ப ஆட்சிதூக்கி எறியப்பட்டது போல், தமிழகத்தில் கருணாநிதி குடும்பம் தூக்கி எறியப்பட வேண்டும். குறுநில மன்னர்களிடமிருந்து கட்சியை மீட்க வேண்டும் என திமுகவினரே கூறுகின்றனர். இந்த ஆட்சியில் ஒவ்வொரு கோயில் கும்பாபிஷேகத்திலும் கோடிக்கணக்கான பணம் கொள்ளையடிக்கப்படுகிறது என்றார்.

SCROLL FOR NEXT