ஹெச்.ராஜா|கோப்புப் படம்
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா நேற்று காலை தனது குடும்பத்தினருடன் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் எச்.ராஜா கூறியதாவது: தமிழகத்தில் திமுக அரசு அரசியல் சட்டத்தின் அனைத்து கரங்களையும் முடக்கி போட்டுள்ளது. தமிழகத்தில் இந்தியை திணிக்கின்ற முதல் குடும்பம், முதல்வர் மு.க. ஸ்டாலின் குடும்பம். சமச்சீர் கல்வியை புறக்கணிக்கிற தமிழ் விரோத தீய அரசு மு.க.ஸ்டாலின் அரசு.
பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, கடந்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டார். தற்போது அவர் போட்டியிடவில்லை. அதை பெரிதாக்கி பாஜகவுக்குள் சண்டையை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். தமிழக வெற்றிக்கழகத்தால் திமுகவுக்குதான் பாதிப்பு. விஜய் திமுக கூட்டணியின் வாக்குகளை தான் பிரிப்பார்.
குறிப்பாக, திருமாவளவன் கட்சியின் வாக்குகளை தான் விஜய் பிரிப்பார். தே.ஜ. கூட்டணிக் கட்சிகளின் வாக்குகளை விஜய்யால் பிரிக்க முடியாது. எனவே, விஜய்யின் வருகை திமுகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.