காரைக்குடி / சென்னை: நீதிமன்றத்தை அவமானப்படுத்திய மதுரை ஆட்சியரும், எஸ்.பி.யும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார். திருப்பரங்குன்றம் தீபத்தூண் தீர்ப்பை வரவேற்று காரைக்குடியில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தலைமையிலானகட்சியினர் நேற்று பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.
பின்னர் ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது: தீபத்தூண் விவகாரத்தில் நிரந்தரத் தீர்வளித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு நன்றி. இந்த விஷயத்தில் மதப் பிரச்சினையோ, சட்டம் ஒழுங்கு பிரச்சினையோ ஏற்படவில்லை. அரசியல் உள்நோக்குடன் அரசு செயல்பட்டது ஏற்புடையதல்ல என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய நாடாளுமன்றத்தில் மனு அளித்தது உள்நோக்கம் என்பது தெரிகிறது. டிச. 1-ம் தேதியே தீபம் ஏற்ற அனுமதித்திருக்கலாம். அதை தடுத்தது முட்டாள்தனம். இனியாவது தீபம் ஏற்ற வேண்டும். தீக்குளித்து உயிரிழந்த பூர்ணசந்திரனின் தியாகத்துக்காக கிடைத்த நீதியாக தீர்ப்பைக் கருதுகிறேன்.
தமிழக அரசு இந்துக்களின் உணர்வுகளை காயப்படுத்தாமல், தீர்ப்பை செயல்படுத்த வேண்டும். இந்துக்கள் எப்போதும் வன்முறையாளர்கள் அல்ல. ஆனால், கொள்கையில் உறுதியாக இருந்து வெற்றி பெறுவார்கள். இனியாவது தமிழக அரசு சட்டத்தை மதித்து நடந்துகொள்ள வேண்டும். சட்டத்தை மீறி, நீதிமன்றத்தை அவமானப்படுத்தியது தொடர்பாக மதுரை ஆட்சியரும், காவல் ஆணையரும் மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பாஜக, இந்து அமைப்பு வரவேற்பு: திருப்பரங்குன்றம் தீபத் தூண் விவகாரம் தொடர்பான தீர்ப்பை பாஜக மற்றும் இந்து அமைப்புகள் வரவேற்றுள்ளன. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்: தீர்ப்பு வழங்கிய சில மணி நேரத்திலேயே மேல்முறையீடு செய்வோம் என மீண்டும் குட்டிக்கரணம் அடிக்கத் தொடங்கியுள்ளது திமுக அரசு. தீபமேற்றும் தமிழர் பண்பாட்டை முடக்க முயலும் திமுக அரசு, இன்னும் எத்தனை முறை நீதிமன்றத்தால் குட்டுப்பட்டால் திருந்தும்? தீபத்தூணில் தீபம் ஏற்றுவது 100 சதவீதம் உறுதி.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: இது நியாயமான, நடுநிலையான தீர்ப்பு. சட்டம்-ஒழுங்கு பிரச்சினை எழாதபோது, மக்களிடையே தமிழக அரசு அச்சத்தை ஏற்படுத்தி இருக்கக் கூடாது.
இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்: தீபம் ஏற்றுவதைத் தடுக்க திமுக அரசு செய்த அத்தனை சதிச் செயல்களையும் முறியடித்து, நீதியை நிலைநாட்டியுள்ளது நீதிமன்றம். இந்துக்களின், முருக பக்தர்களின் உரிமையை நிலைநாட்டிய, வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை இந்து முன்னணி வரவேற்கிறது.
மத்திய அமைச்சர் எல்.முருகன்: தீபம் ஏற்றுவதற்காக உயிரை மாய்த்துக் கொண்ட முருக பக்தர் பூரணசந்திரன் தியாகத்துக்கு, உரிய நீதியை நீதிமன்றத் தீர்ப்பு வழங்கியுள்ளது.
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை: சுடுகாட்டில்தான் பிணத்தை எரிக்க வேண்டும், பழக்க வழக்கங்களை மாற்றக் கூடாது என்று அமைச்சர் ரகுபதி பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. நாவடக்கம் இன்றி திரியும் திமுகவினருக்கு தமிழக மக்கள் பாடம் புகட்டுவார்கள்.
பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத்: நீதிமன்றத்தின் கண்ணியத்துக்கு எதிராக, நீதிபதிகளையும் நீதிமன்றத்தை அவமதித்து இந்திய அரசியல் சாசனத்தை மீறி உள்ளார் அமைச்சர் ரகுபதி. அவரை முதல்வர் ஸ்டாலின் உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும். அமைச்சர் சேகர்பாபு பதவி விலக வேண்டும்,
நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்: தீபம் ஏற்றும் விவகாரத்தில் தமிழக அரசு கையாண்ட முறையை நீதிமன்றம் கண்டித்துள்ளது. அரசு கூடுதல் கவனம் செலுத்தி, பிரச்சினை உருவாகாமல் செய்திருக்கலாம்.