பிரதமர் மோடியை வரவேற்கும் பேனரில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் படம் இடம் பெற்றது ஏன் என்பது குறித்து பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா விளக்கம் அளித்துள்ளார்.
வரும் 23-ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் மதுராந்தகம் அருகே தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டம் நடக்கிறது. இதில் கூட்டணியில் இடம்பெறும் கட்சித் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்றும் கூட்டணியில் இடம்பெறுபவர்கள் யார் என்று அப்போது தெரியும் என்று பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர். கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தரும் பிரதமர் மோடியை வரவேற்று மதுராந்தகத்தில் வைக்கப்பட்ட பேனரில் அதிமுக – பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தலைவர்களின் படங்களோடு, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் படமும் இடம்பெற்றுள்ளது. இன்னமும் கூட்டணி முடிவை அறிவிக்காத டிடிவி தினகரன் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேருகிறாரா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா நேற்று காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம் டிடிவி தினகரன் படம் இடம்பெற்றுள்ளது பற்றி கேட்கப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது: திமுக, காங்கிரஸ் கட்சியினர் ஜல்லிக்கட்டுக்கு விரோதமாகவும், தமிழக மக்களின் பண்பாடு, கலாச்சாரத்துக்கு எதிராகவும் செயல்பட்டனர். ஆனால் தற்போது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக செயல்பட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. தமிழ் உணர்வுகள் வலுப்பெற்ற காரணத்தால், எதிர்த்தவர்கள் ஆதரிக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகியுள்ளனர். இது வரவேற்கத்தக்கது.
பிரதமர் மோடி இந்திய மக்கள் அனைவருக்கும் பொதுவானவர். அதிமுக, பாஜக இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் யார் இடம் பெற வேண்டும் என்பதை முடிவு செய்வார்கள்.திமுகவை வீழ்த்த டிடிவி.தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற வேண்டும் என விரும்புகிறோம். அதை பிரதிபலிக்கும் விதமாக தான் பிரதமரை வரவேற்கும் பேனரில் டிடிவி.தினகரனின் புகைப்படம் இடம் பெற்றிருக்கலாம் என்றார்.
கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணையை கேட்டதே விஜய் தான். உயிரிழப்பு சம்பவம் நடந்தபோது, அங்கு விஜய் இருந்தார். அதனால் அவரிடம் சிபிஐ விசாரணை செய்ததில் அரசியல் நிர்பந்தம் எதுவும் கிடையாது. ஜனநாயகன் திரைப்படம் தொடர்பான பிரச்சினையில் தயாரிப்பாளர் தணிக்கை வாரியத்திடம் முறையீடு செய்து தங்களது விளக்கத்தை தெரிவித்திருந்தாலே போதும். நீதிமன்றத்துக்கு சென்றிருக்க தேவையில்லை. அவசரப்பட்டு நீதிமன்றம் சென்றுள்ளனர். ஜனநாயகன் திரைப்படம் விவகாரத்தில் மத்திய அரசு தடையாக இல்லை.
உடனடியாக நீதிமன்ற உத்தரவை மதித்து திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தமிழக அரசு தீபம் ஏற்ற வேண்டும். அப்படி இல்லையென்றால், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் நீதிமன்ற உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.