

ஜனநாயகத்தை சீர்குலைக்க, நம் அரசியல் எதிரிகள் எத்தனை திட்டங்கள் தீட்டினாலும், அவை அனைத்தையும் தவிடுபொடியாக்கி, தமிழக மக்களுக்கு நல்லாட்சியை வழங்கும் கடமையும், பொறுப்பும் நமக்கு முன் உள்ளது என்று அதிமுக தொண்டர்களுக்கு பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதிமுக நிறுவன தலைவரும், முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 109-வது பிறந்த நாள் இன்று (17-ம் தேதி) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி, தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: இந்த மண்ணை விட்டு மறைந்தாலும், மக்கள் மனங்களில் இருந்துநீங்காமல் நிலைத்த புகழோடு வாழ்ந்து கொண்டிருப்பவர் எம்ஜிஆர். திரைப்பட பாடல்களின் மூலம் புரட்சிகரமான சிந்தனைகளையும், சமூக சீர்திருத்தக் கருத்துகளையும் எடுத்துச் சொன்னதில் எம்ஜிஆருக்கு நிகரானவரை, உலகில் வேறு எங்கும் காண முடியாது.
தீய சக்தியின் ஆட்சியிலே இருள் சூழ்ந்திருந்த தமிழகத்தை மீட்டெடுத்து ஒளியேற்றி, குடும்ப ஆட்சிக்கும், கொடுங்கோல் ஆட்சிக்கும் முடிவு கட்டி, மக்கள் ஆட்சியை உருவாக்கியதோடு, சட்டப்பேரவை தேர்தலில் தொடர் வெற்றியைப் பெற்று கழகத்துக்கு பெருமை சேர்த்த மகத்தான தலைவராக எம்ஜிஆர் இருந்தார். தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் மக்கள் விரோத ஆட்சியை, குடும்ப ஆட்சியை விரட்டவும், அதிமுகவை ஆட்சி பீடத்தில் மீண்டும் அமர்த்தவும், தமிழக வாக்காளர்கள் ஒவ்வொருவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஜனநாயகத்தை சீர்குலைக்க, நம் அரசியல் எதிரிகள் எத்தனை திட்டங்கள் தீட்டினாலும், அவை அனைத்தையும் தவிடுபொடியாக்கி, தமிழக மக்களுக்கு நல்லாட்சியை வழங்கும் கடமையும், பொறுப்பும், நம் அனைவர் முன்பும் இருக்கின்றது. அந்தப் பயணத்தில் கட்சி தொண்டர்கள் ஒவ்வொருவருடைய உழைப்பும், ஆர்வமும் மிகவும் இன்றியமையாததாகும். உங்கள் முயற்சிகள் அனைத்துக்கும் என்றென்றும் நான் உறுதுணையாக இருப்பேன். நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து அதிமுகவை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வோம், வெற்றிவாகை சூடுவோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக மேட்டூர் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட மேச்சேரி அருகே காரப்பட்டி பள்ளம் பகுதியில் சேலம் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் பொங்கல் விழா நேற்று முன்தினம் நடந்தது.
இந்த விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கலந்து கொண்டு, காளை மாடுகள் பூட்டிய மாட்டு வண்டியில் ஒரு கிலோ மீட்டர் தூரம் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு, அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர், 108 பானைகள் கொண்டு நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்டு ஒயிலாட்டம், பொம்மலாட்டம், வள்ளி கும்மி கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டார்.
தொடர்ந்து, மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர், அவர் பேசியதாவது: இந்த ஆண்டு நடக்கப்போகிறசட்டப்பேரவை தேர்தலில் நிச்சயம் வழி பிறக்கும். அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சியாக வாழ்ந்த காலம் அதிமுக காலம். திமுக ஆட்சி எப்போது போகும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அதிமுக, பாஜக, பாமக, இணைந்துள்ள வலுவான எங்கள் கூட்டணியில் சில கட்சிகள் சேரப்போகின்றன. இது வெற்றிக் கூட்டணி,நம் கூட்டணி வரும் தேர்தலில் ஆட்சியமைக்கும், அதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது.
அதிமுக தலைமையில் பலம் பொருந்திய கூட்டணி அமைக்கப்பட்டுவிட்டது. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கிற காங்கிரஸ் கை நழுவி போகப்போகிறது, திமுக கூட்டணியில் காங்கிரஸ் நிலைக்குமா என்ற கேள்வி வந்துவிட்டது, அதிமுகவை பொறுத்தவரை பலம் வாய்ந்த கூட்டணி. தேர்தலில் திமுகவை வீழ்த்துவோம். அதிமுக உழைப்பாளர்கள் நிறைந்த கட்சி, தொண்டர்கள் நிறைந்த கட்சி. பாஜக 3-வது முறையாக நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வலிமையான ஆட்சிமத்தியில் நடக்கிறது. உலகம் முழுவதும் பாராட்டப்படக்கூடிய பிரதமராகமோடி இருக்கிறார். இந்தியா பல மாநிலங்கள் கொண்ட நாடு. நாடு வளமாக சிறப்பாக இருக்க மத்தியில் இருக்கிற ஆட்சி துணை நிற்கின்றது.
தமிழகத்தில் திறமையற்ற முதல்வர் இருக்கிற காரணத்தினால் மக்கள் நிம்மதியாக இல்லை. அரசுபணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், பகுதி நேர ஆசிரியர்கள், செவிலியர்கள் ஆகியோரின் போராட்டங்கள் இல்லாத நாளே இல்லை. திமுக ஆட்சியை ஒட்டுமொத்த மக்களும் புறக்கணிக்கிற நிலை வந்துவிட்டது. அடுத்த தை திருநாளில் ஆளும் கட்சியாக இருந்து பொங்கல் திருநாளை கொண்டாடுவோம். திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. கிராமம் முதல் நகரம் வரைபோதைப்பொருள் விற்பனை நடக்கிறது. பல்வேறு கொடுமைகள் நடக்கின்றன. சட்டம் ஒழுங்கு சந்திசிரிக்க காரணம், சட்டம் ஒழுங்கு டிஜிபி இதுவரை நியமிக்கப்படாததுதான்.
பொறுப்பு டிஜிபியை நியமித்தார்கள், அவர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்குச் சென்றதால், இன்னொரு பொறுப்பு டிஜிபி நியமிக்கப்பட்டுள்ளார். சட்டம் ஒழுங்கு டிஜிபியை நியமிக்க முடியாத அவல ஆட்சி நடக்கிறது. இப்படி இருந்தால் எப்படி சட்டம் ஒழுங்கு காப்பாற்றப்படும்? இந்த ஆட்சியில் எப்படி மக்களுக்கு நன்மை கிடைக்கும்? இவ்வாறு அவர் பேசினார்.