ஆந்திர மாநிலத்தை ஒட்டியுள்ள சட்டப்பேரவைத் தொகுதி கும்மிடிப்பூண்டி. தொகுதிகளின் வரிசைப் பட்டியலின் முதல் தொகுதி எனும் சிறப்புப் பெற்றது இத்தொகுதி.
பிரசித்தி பெற்ற பெரியபாளையம் பவானி அம்மன் கோயில், சென்னை குடிநீருக்கான புதிய நீர்த்தேக்கமான கண்ணன் கோட்டை-தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கம், பல தனியார் அனல்மின் நிலையங்கள், இரும்பு உருக்காலைகள், தொழிற்சாலைகள் அடங்கிய 4 தொழிற்பேட்டைகள், தனியார் பொறியியல் கல்லூரிகள் உள்ளிட்டவற்றை தன்னகத்தே கொண்டுள்ளது.
கடந்த பிப்.23-ம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, இத் தொகுதியில், 2 லட்சத்து 51 ஆயிரத்து 603 வாக்காளர்கள் உள்ளனர். அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் இத்தொகுதியில், கடந்த 1957 முதல் 2021 வரை (2005 இடைத்தேர்தல் உட்பட) 16 தேர்தல்கள் நடைபெற்றுள்ளன.
இதில் 8 முறை அதிமுகவும், 2011 தேர்தலில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த தேமுதிகவும், 5 முறை திமுகவும், தலா ஒரு முறை காங்கிரஸும், சுதந்திரா கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. இத் தொகுதியில் 2001 தேர்தலில் வென்ற அதிமுக வேட்பாளர் கே.சுதர்சனம், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக சிறிது காலம் பதவி வகித்தார்.
கடந்த 2005-ல் பெரியபாளையம் அருகே உள்ள தானாக் குளத்தில் கே.சுதர்சனம் வீட்டுக்குள் புகுந்த பவாரியா கொள்ளையர்கள், அவரை கொலை செய்துவிட்டு தப்பியது மிகவும் பரபரப்பானது. 2005 இடைத்தேர்தல், மற்றும் 2006, 2016 தேர்தல்களில் கே.சுதர்சனத்தின் மகன் கே.எஸ்.விஜயகுமார் அதிமுக வேட்பாளராக வெற்றி பெற்றார். கடந்த 2021 தேர்தலில் திமுகவின் டி.ஜெ.கோவிந்தராஜன் 1,26,452 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
தொகுதியில் நிலவும் பிரச்சினைகள்
தொழிற்பேட்டைகள் அடங்கிய கும்மிடிப்பூண்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காற்று, நிலத்தடி நீரில் அதிக மாசு ஏற்படுவது முக்கிய பிரச்சினையாக உள்ளது.
கும்மிடிப்பூண்டி பகுதியில் படுக்கை வசதியுடன் கூடிய இ.எஸ்.ஐ. மருத்துவமனை, விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையம், மாநகர போக்குவரத்துக்கழக பணிமனை, அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும், கும்மிடிப்பூண்டி, மாதர்பாக்கம் பேருந்து நிலையங்களை நவீன வசதிகள் கொண்டவையாக மேம்படுத்தவேண்டும் உள்ளிட்டவை மக்களின் நீண்டகால கோரிக்கைகளாக உள்ளன.
இத்தொகுதியில் பெருமளவில் வசித்து வரும் வன்னியர், பட்டியலின மக்கள்தான் தேர்தலில் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பவர்களாக உள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக முதலியார், தெலுங்கு மொழி பேசும் நாயுடு சமூகத்தினரும் கணிசமாக வசித்து வருகின்றனர்.
வேட்பாளர்கள் பின்புலம்
இத்தேர்தலில் திமுக சார்பில் டி.ஜெ.கோவிந்த ராஜன் மீண்டும் போட்டியிடுகிறார். அதிமுகவில், அக்கட்சியின் பூண்டி கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் வி.சுதாகர்,நாதக-வில் இரா.தர், தவெக-வில் விஜயகுமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
மேலும், வி.கே.சசிகலாவின் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக்கழக கூட்டணியில் அங்கம் வகிக்கிற பாமக (ராமதாஸ் அணி) சார்பில் சங்கரும் களத்தில் இறங்கியுள்ளார்.
இருப்பினும் இங்கு திமுக, அதிமுக இடையில்தான் போட்டி நிலவுகிறது. திமுக வேட்பாளரைப் பொருத்தவரை மகளிர் உரிமைத் தொகை போன்ற சமூகநலத் திட்டங்கள், கூட்டணிக் கட்சிகளின் வாக்கு வங்கிகள் அவருக்கு சாதகமாக உள்ளன.
மேலும், கணிசமாக உள்ள இஸ்லாமிய, கிறிஸ்தவ வாக்குகளும் பலமாக உள்ளன. இருப்பினும் கும்மிடிப்பூண்டி தொகுதியில் வெற்றிக்கொடி நாட்டப்போவது யார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
வாக்காளர்கள் விவரம்
ஆண்கள் - 1,22,195
பெண்கள் - 1,29,372
3-ம் பாலினத்தவர் - 36
மொத்த வாக்காளர்கள் - 2,51,603