இடுக்கி: கேரள சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் கல்வியறிவற்ற குஜராத்திகள் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியது பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கேரள சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில் பிரச்சார கூட்டம் இடுக்கியில் நேற்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்று பேசுகையில், “கேரள மக்களைத் தவறாக வழிநடத்தாதீர்கள், அவர்கள் மிகவும் புத்திசாலிகள், படித்தவர்கள். பிரதமர் மோடி, பினராயி விஜயன் இருவரும் குஜராத்திலும் மற்ற இடங்களிலும் கல்வியறிவில்லாத மக்களை ஏமாற்றலாம். ஆனால் கேரள மக்களை உங்களால் ஏமாற்ற முடியாது" என்றார்.
கார்கேவின் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து அதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “குஜராத் மக்கள் குறித்து காங்கிரஸ் தலைவர் கார்கே கூறிய கருத்துகள் மிகவும் ஆட்சேபத்துக்குரியவை மற்றும் துரதிர்ஷ்டவசமானவை. இத்தகைய கருத்துகள் குஜராத்தின் 6 கோடி மக்களை அவமதிப்பது மட்டுமல்லாமல், மகாத்மா காந்தி மற்றும் சர்தார் படேலின் புனித மண்ணையும் அவமதிப்பதாகும்.
தேசக் கட்டுமானம், வளர்ச்சி மற்றும் ஒற்றுமையில் குஜராத் எப்போதும் முன்னணியில் இருந்து வருகிறது, எதிர்காலத்திலும் அது தொடரும். இத்தகைய அறிக்கைகள் காங்கிரஸ் கட்சியின் குறுகிய மனப்பான்மையை வெளிப்படுத்துகின்றன” என்று அவர் கூறியுள்ளார். கார்கே கருத்துக்கு குஜராத் துணை முதல்வர் ஹர்ஷ் சங்கவியும் கண்டனம் தெரிவித்துள்ளார். "காங்கிரஸ், குஜராத் மக்களை குறிவைப்பது அவர்கள் மீது அக்கட்சி கொண்டுள்ள ஆழமான வெறுப்பையே காட்டுகிறது" என்று அவர் கூறியுள்ளார்.