மதுரை: மேலூர் அருகே உறங்கான்பட்டி ஊராட்சி தர்மசானப்பட்டியிலுள்ள குழும வீடுகள் தொடர் மழைக்கு இடிந்து விழுந்துள்ளன. இதனால் அந்தக் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
மதுரை மாவட்டம் மேலூர் ஊராட்சி ஒன்றியம் உறங்கான்பட்டி ஊராட்சி மேலூர் - சிவகங்கை மதகுபட்டி சாலையில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில் புலிமலைப்பட்டி, கல்லம்பட்டி, தூரதிரிபட்டி, தமட்டமலைபட்டி, அய்யமுத்தன்னம்பட்டி, குப்பிக்கிபட்டி, கொட்டாணிபட்டி, அழகிச்சிபட்டி, கண்மாய்பட்டி, புதுப்பட்டி, தருமசானப்பட்டி, உட்பட 14 கிராமங்கள் உள்ளன.
இதில் தர்மசானப்பட்டியில் 46 குழும வீடுகள் 1992-ம் ஆண்டு கட்டப்பட்டன. இந்த வீடுகள் தற்போது மேற்கூரைகள் பெயர்ந்து இரும்புக் கம்பிகள் எலும்புக்கூடாய் காட்சி அளிக்கின்றன.
மேலும் பல வீடுகள் இடிந்து விழும் அச்சத்தில் குடியிருப்புகளிலிருந்து வெளியேறி அப்பகுதி மக்கள் வாடகை வீடுகளில் வசிக்கின்றனர். இதில் சில வீடுகள் கடந்த சில நாட்கள் தொடர்ந்து பெய்யும் மழைக்கு சேதமடைந்து இடிந்து விழுந்துள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் பயத்தில் உள்ளனர்.
இது குறித்து தர்மசானப்பட்டி கிராம மக்கள் கூறுகையில், “தர்மசானப்பட்டியில் ஆதிதிராவிடர்களுக்கென 1980-ஆம் ஆண்டு இடஒதுக்கீடு செய்து 1992-ல் 46 குழும வீடுகள் கட்டித்தரப்பட்டன. அதில் 21 வீடுகள் வாழத் தகுதியற்ற நிலையில் உள்ளன. இது குறித்து நூற்றுக்கணக்கான புகார் மனுக்கள் அளித்தும் நடவடிக்கை இல்லை.
கடந்த 2024-ம் ஆண்டு ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தினர் கூட்டாக வந்து கணக்கெடுத்து, கிராமப்புற வீடுகளை பழுதுபார்க்கும் திட்டத்தில் 21 வீடுகளை கணக்கெடுத்தனர். அதோடு சரி அதற்குப் பிறகு அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.
பராமரிப்பு நிதி ஒதுக்கவில்லை. தற்போது பெய்த மழைக்கு சில வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. இதனால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளோம். அருகிலுள்ள வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறோம். இது குறித்து வருவாய்த் துறையினருக்கு புகார் அளித்துள்ளோம். பல வீடுகளில் மேற்கூரை பெயர்ந்து இரும்புக் கம்பிகள் காட்சியளிக்கின்றன. எப்போது விழுமோ என்ற அச்சம் உள்ளது. தற்போது பெய்த மழைக்கு உயிரை கையில் பிடித்து வாழ்ந்து வருகிறோம்.
எனவே, ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் பாரபட்சமின்றி நிதி ஒதுக்கி புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும். மேலும், உறங்கான்பட்டி ஊராட்சியில் 14 உட்கடை கிராமங்கள் உள்ளன. சுமார் 10 ஆயிரம் பேருக்கு மேல் வசிக்கின்றனர். இதனை 2 ஊராட்சிகளாக பிரித்தால்தான் திட்டங்கள் மக்களை சென்றடையும். மதுரையிலிருந்து 50 கி.மீ தூரத்தில் எங்களது கிராமம் உள்ளதால் ஆட்சியர் அலுவலகத்துக்கு எங்களது குறைகள் எட்டவில்லை” என்று வேதனையுடன் தெரிவித்தனர்.