தமிழகம்

விருகம்பாக்கம் தொகுதியில் வீறுநடை போடுபவர் யார்?

வே.கோபாலகிருஷ்ணன்

தமிழக சட்​டப்​பேரவை தொகு​தி​களின் வரிசைப் பட்​டியலில் 22-வ​தாக இடம் பெற்​றுள்ள விரு​கம்​பாக்​கம் தொகு​தி, சென்​னை​யின் மிக முக்​கிய​மான அடை​யாளங்​களைக் கொண்​டுள்​ளது. கடந்த 2009-ம் ஆண்டு மறுசீரமைப்​பின்​போது விருகம்பாக்கம் தொகுதி உரு​வாக்​கப்​பட்​டது.

ஆசி​யா​வின் மிகப்​பெரிய சந்​தைகளில் ஒன்​றான கோயம்​பேடு மொத்த விற்​பனை வளாகம், சென்னை புறநகர் பேருந்து நிலை​யம், சினிமா கலைஞர்​கள் சங்​கமிக்​கும் சாலிகி​ராமம் ஆகிய​வற்​றுடன் காளி​யம்​மன் கோயில், வேம்​புலி​யம்​மன் கோயில், ராகவேந்​திரா கோயில் என புகழ்​பெற்ற ஆன்​மிகத் தலங்​களும் இத்​தொகு​தி​யின் அடை​யாளங்​களாகத் திகழ்​கின்​றன.

இத்​தொகு​தி​யில் திமுக - அதி​முக ஆகிய இரு கட்​சிகளும் மாறி​மாறி வெற்​றியைச் சுவைத்​துள்​ளன. கடந்த 2021 தேர்​தலில் திமுக சார்​பில் போட்​டி​யிட்ட பிர​பாகர் ராஜா 74,351 வாக்​கு​கள் பெற்று வெற்றி பெற்​றார். அவரை எதிர்த்து அதி​முக​வில் களம் கண்ட விருகை ரவி 55,984 வாக்​கு​கள் பெற்​றார்.

          

தொகு​தி​யில் நில​வும் பிரச்​சினை​கள்

இத் தொகு​தி​யைப் பொறுத்​தவரை, ஆற்​காடு சாலை​யில் நடை​பெற்று வரும் மெட்ரோ ரயில் பணி​கள் மற்​றும் குறுகிய சாலைகளால் ஏற்​படும் போக்​கு​வரத்து நெரிசல் பொது​மக்​களைப் பெரிதும் வதைக்​கிறது.

ஜவஹர்​லால் நேரு சாலை மற்​றும் ஆற்​காடு சாலையை இணைக்​கும் 100 அடி சாலை​யிலும் இதே நிலை​தான் உள்​ளது. மேலும், கே.கே.நகர் மற்​றும் விரு​கம்​பாக்​கம் பகு​தி​களில் உணவகங்​களாலும் கடைகளாலும் நடை​பாதைகள் ஆக்​கிரமிக்​கப்​பட்​டுள்​ள​தால், பாத​சா​ரி​களும் வாகன ஓட்​டிகளும் மிக​வும் சிரமப்​படு​கின்​றனர்.

ஆற்​காடு சாலை​யி​லிருந்து கோயம்​பேடு சுத்​தி​கரிப்பு நிலை​யத்​துக்​குச் செல்​லும் பாதாளச் சாக்​கடை குழாய்​களில் அடிக்​கடி ஏற்​படும் அடைப்​பு​களால் கழி​வுநீர் தெருக்​களில் ஆறாக ஓடு​கிறது.

இதைத் தடுக்க இப்​பகு​தி​யில் கூடு​தல் ‘மினி நீரேற்று நிலை​யங்​களை’ அமைக்க வேண்​டும் என்ற மக்​களின் நீண்​ட​கால கோரிக்கை இன்​னும் காகித அளவிலேயே உள்​ளது.

இத்​தொகு​தி​யைப் பொறுத்​தவரை தென்​மாவட்​டங்​களி​லிருந்து குடிபெயர்ந்த மக்​களே பெரும்​பான்​மை​யாக உள்​ளனர். குறிப்​பாக நாடார், தேவர் மற்​றும் பட்​டியல் சமூக மக்​களின் வாக்​கு​களே வெற்றி - தோல்​வியைத் தீர்​மானிக்​கும் சக்​தி​யாக உள்​ளன.

வேட்​பாளர்​கள் பின்​புலம்

இந்​தத் தேர்​தலில் திமுக சார்​பில் தற்​போதைய எம்​எல்ஏ பிர​பாகர் ராஜாவே மீண்​டும் போட்​டி​யிடு​கிறார். தமிழ்​நாடு வணி​கர் சங்​கங்​களின் பேரமைப்​புத் தலை​வர் விக்​கிரம​ராஜா​வின் மகனான இவருக்​கு, வணி​கர் சங்​கங்​களின் ஆதர​வும் ஆளுங்​கட்சி பலமும் சாதக​மாக உள்​ளன.

அதி​முக சார்​பில் விருகை ரவி மீண்​டும் களம் காண்​கிறார். தொகு​தி​யில் நீண்​ட​கால அரசி​யல் அனுபவம் கொண்ட இவருக்​கு, அதி​முக​வின் நிலை​யான வாக்கு வங்கி கைகொடுக்​கும் என கூறப்​படு​கிறது. மேலும், அதி​முக - பாஜக - பாமக கூட்​ட​ணி​யின் சமூக வாக்​கு​களை ஒருங்​கிணைக்​கும் முயற்​சி​யில் ஈடு​பட்​டுள்​ளார்.

நாம் தமிழர் கட்சி சார்​பில் சந்​தோஷ் போட்​டி​யிடு​கிறார். தமிழக வெற்றி கழகம் சார்​பில் நடிகர் விஜய் தனது ஓட்​டுநர் மகன் சபரி​நாதனை வேட்​பாள​ராக நிறுத்​தி​யுள்​ளார். பிரச்​சா​ரத்​துக்கு விஜய் நேரில் வரு​வ​தாக வாக்​குறுதி அளித்​துள்​ள​தால், சபரி​நாதன் பிரிக்​கும் இளைஞர்​கள் மற்​றும் முதல்​முறை வாக்​காளர்​களின் வாக்​கு​கள் திமுக​வின் வெற்றி வாய்ப்பை சவாலாக்​கக் கூடும்.

கடந்த முறை 18 ஆயிரம் வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் திமுக வெற்றி பெற்​றது. இந்த முறை தவெக வரவால் தேர்​தல் முடிவு​கள் எத்​தகைய திருப்​பத்தை ஏற்​படுத்​தும் என்ற எதிர்​பார்ப்பு எகிற வைக்​கிறது.

வாக்காளர்கள் விவரம்

ஆண் - 95,025

பெண் - 1,01,461

மூன்றாம் பாலினத்தவர் - 50

மொத்த வாக்காளர்கள் - 1,96,536

SCROLL FOR NEXT