பசுவின் கன்றுக்காக தனது மகனை தேர் காலில் இட்டு கொன்ற மனு நீதிச் சோழன் அரசாண்ட ஊர் திருவாரூர். சைவ சமயம் போற்றும் தியாகராஜர் சுவாமி கோயில் இந்த ஊரில் உள்ளது. திருவாரூரில் பிறந்தாலே முக்தி என்று சைவ சமயம் போற்றுகிறது.
இந்த கோயிலின் ஆழித்தேர் ஆசியாவிலேயே மிகப் பெரியது என பெயர் பெற்றது. இந்த ஊரில்தான் சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜ சுவாமிகள், முத்துசாமி தீட்சதர், சியாமா சாஸ்திரிகள் அவதரித்து இசையை வளர்த்தனர்.
திமுக தலைவர் கருணாநிதி படித்ததும், தனது அரசியல் பயணத்தை மாணவப் பருவத்திலேயே தொடங்கியதும் இந்த திருவாரூரில்தான். இப்படி பல்வேறு சிறப்புகளைப் பெற்ற தொகுதியாக திருவாரூர் விளங்குகிறது.
இந்த தொகுதியில் விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களுமே பெருமளவு நிறைந்துள்ளனர். விவசாயத் தொழிலை மையமாகக்கொண்டே இத்தொகுதியின் அரசியல் நகர்கிறது.
இத்தொகுதியில் திருவாரூர், கூத்தா நல்லூர் நகராட்சிப் பகுதிகளும், கொரடாச்சேரி பேரூராட்சியும், திருவாரூர் ஒன்றியத்தில் 34, கொரடாச்சேரி ஒன்றியத்தில் 44, மன்னார்குடி ஒன்றியத்தில் 20, கோட்டூர் ஒன்றியத்தில் 5 என103 கிராம ஊராட்சிகளும் இடம் பெற்றுள்ளன.
இந்தத் தொகுதியில் பெருமளவு வெள்ளாளர் மற்றும் பட்டியலினத்தவர் அதிகம் உள்ளனர். இந்தத் தொகுதியில் 1971 முதல் இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் திமுக 9 முறையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
கடந்த 2021 தேர்தலில் திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன் 1,08,906 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஏ.என்.ஆர்.பன்னீர் செல்வம் 57,732 வாக்குகள் பெற்று, 51,174 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
இந்தத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வினோதினி 26,300 வாக்குகள் பெற்றார். தற்போது இந்த தேர்தலில் தவெகவும் களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தத் தொகுதியில் திமுக சார்பில் தற்போதைய எம்எல்ஏ பூண்டி கலைவாணன், அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளர் கோவி.சந்துரு, தவெக சார்பில் வி.வீரமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் பி.அஸ்வினி உள்ளிட்டோர் களம் காண்கின்றனர்.
திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணனுக்கு ஆதரவாக முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்துள்ளார். இதேபோல, அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி மற்றும் பாஜக தலைவர்கள் விரைவில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர்.
தற்போது தொகுதி திமுக, பாஜக, நாதக, தவெக வேட்பாளர்கள் கொளுத்தும் வெயிலில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த தொகுதியில் திமுக, பாஜக இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
எதிர்பார்ப்புகள்
* பேருந்து நிலைய வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும்.
* புதைசாக்கடை பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.
* குடிமனைப் பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும்.
* திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
* திருவாரூர்- மன்னார்குடி சாலையை அகலப்படுத்தி நேர் சாலையாக மாற்ற வேண்டும்.
* திருவாரூரில் அரசு மேல்நிலைப் பள்ளி தொடங்க வேண்டும்.
* விரிவாக்கம் என்ற பெயரில் நகராட்சியுடன் அருகில் உள்ள கிராமங்களை இணைப்பதை கைவிட வேண்டும்.
* பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான இப்பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டம் நிறைவேற்றப்படாது என உறுதி அளிக்க வேண்டும்.
இதுவரை வென்றவர்கள்
1971- தாழை மு.கருணாநிதி - திமுக
1977 - தாழை மு.கருணாநிதி - திமுக
1980 - எம்.செல்லமுத்து - மார்க். கம்யூ.
1984 - எம்.செல்லமுத்து - மார்க். கம்யூ.
1989 - வி.தம்புசாமி - மார்க். கம்யூ.
1991 - வி.தம்புசாமி - மார்க். கம்யூ.
1996 - ஏ.அசோகன் - திமுக
2001 - ஏ.அசோகன் - திமுக
2006 - உ.மதிவாணன் - திமுக
2011 - மு.கருணநிதி - திமுக
2016 - மு.கருணாநிதி - திமுக
2019 - பூண்டி கலைவாணன் - திமுக
(இடைத்தேர்தல்)
2021 - பூண்டி கலைவாணன் - திமுக
வாக்காளர்கள் எண்ணிக்கை
ஆண்கள் - 1,26,054
பெண்கள்- 1,31,818
மூன்றாம் பாலினத்தவர் - 20
மொத்தம் - 2,57,89