சட்டப்பேரவைத் தொகுதி வரிசையில் 20-வது இடத்தில் உள்ளது ஆயிரம் விளக்கு தொகுதி. மறைந்த முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி (கோபாலபுரம்), ஜெயலலிதா (போயஸ்கார்டன்) ஆகியோர் இத்தொகுதியை சேர்ந்தவர்களே. முக்கிய இடங்களான அமெரிக்க துணை தூதரகம், வள்ளுவர் கோட்டம், அண்ணா (ஜெமினி) மேம்பாலம் ஆகியவையும் இத்தொகுதியில் அமைந்துள்ளன.
கடந்த 1952 ஆண்டு நடைபெற்ற சட்டபேரவைத் தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதி உருவாக்கப்பட்டது. ராயப்பேட்டை, நுங்கம்பாக்கம், சூளைமேடு, மாகலிங்கபுரம், தியாகராயநகர், மாம்பலம், ராஜா அண்ணாமலைபுரம், தேனாம்பேட்டை, கோபாலபுரம் ஆகியவை இத்தொகுதியில் அடங்கியுள்ளன.
இத்தொகுதியில் தாழ்த்தப்பட்ட மக்கள் 40 சதவீதமும், வன்னியர் 30 சதவீதமும், முஸ்லிம்கள் 10 சதவீதமும் முதலியார் சமூகத்தினர் ஓரளவும் இருக்கின்றனர். எனவே, தாழ்த்தப்பட்ட மக்களும், வன்னியர்களுமே வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக உள்ளனர்.
இதுவரை இத்தொகுதியில் நடந்த தேர்தல்களில் திமுக 11 முறையும் அதிமுக 4 முறையும் வெற்றிவாகை சூடியுள்ளது. 1989-ம் ஆண்டு திமுக வேட்பாளர் மு.க.ஸ்டாலின் வெற்றி வாகை சூடினார்.
அதன் பிறகு, 1996, 2001, 2006-ம் ஆண்டு தேர்தல்களில் திமுக வேட்பாளர் மு.க.ஸ்டாலின் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தார். கடந்த 2021-ம் ஆண்டு தேர்தலில் திமுக வேட்பாளர் எழிலன் நாகநாதன் வெற்றி பெற்றார்.
தொகுதியில் நிலவும் பிரச்சினைகள்
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகன நிறுத்தப் பிரச்சினை ஆகியவை முக்கிய பிரச்சினைகளாக உள்ளன. இதுதவிர, கொசுத் தொல்லை, பாதாள சாக்கடையில் ஏற்படும் அடைப்பு, குடிநீர் பிரச்சினை, மழைநீர் வடிகால் அமைப்பதற்காக, பல இடங்களில் தோண்டப்பட்ட பள்ளங்களை முறையாக மூடப்படாதது, ஆங்காங்கே குண்டும் குழியுமாக காணப்படும் சாலைகள் போன்றவையும் முக்கிய பிரச்சினைகளாக உள்ளன.
வேட்பாளர்கள் பின்புலம்
இத்தொகுதியில் தற்போதைய எம்எல்ஏ வான திமுகவைச் சேர்ந்த டாக்டர் எழிலன் நாகநாதன் மீண்டும் களம் இறங்குகிறார். திமுக மருத்துவரணி செயலாளரான இவர், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தனிமருத்துவராக இருந்தவர்.
இவர் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், 32,462 ஓட்டுகள் வித்தியாசத்தில் அதிமுகவின் ஆதரவு பெற்ற பாஜக வேட்பாளரான நடிகை குஷ்புவை தோற்கடித்தார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் தேர்தல் வாக்குறுதிகளை நம்பி மீண்டும் களம் இறங்கி உள்ளார்.
அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் வளர்மதி ஏற்கனவே இத்தொகுதியில் வெற்றி பெற்றவர். மேலும், தொகுதி மக்களிடம் நன்கு தெரிந்த முகமாக இருக்கிறார். சாதாரண மக்களிடம் நேரிடையாக பழகக்கூடியவராக இருப்பதால், இது இவருக்கு பெரிய பலமாக இருக்கிறது.
இதுதவிர, தவெக சார்பில் களம் இறங்கும் ஜேசிடி பிரபாகர், நீண்ட அரசியல் அனுபவமிக்கவர். முன்பு அதிமுக சார்பில் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு இருமுறை வெற்றி பெற்றவர். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு சென்றார். இதன்பிறகு, ஓ.பன்னீர்செல்வம் மீது ஏற்பட்ட அதிருப்தியால், கடந்த ஜனவரியில் இருந்து தவெக-வில் இணைந்தார்.
தற்போது, தவெக சார்பில் களம் இறங்கி உள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பில் திரைப்பட இயக்குநர் களஞ்சியம் போட்டியிடுகிறார். இந்த முறை 4 முனை போட்டி நிலவுவதால், யார் வெற்றி பெற்றாலும், அவர்களது வெற்றி எளிதாக இருக்காது என்றே கருதப்படுகிறது.
வாக்காளர்கள் விவரம்
ஆண் - 73,500
பெண் - 80,343
மூன்றாம் பாலினத்தவர் - 65
மொத்த வாக்காளர்கள் - 1,53,908