திருக்கோவிலூரின் அடையாளமான கபிலர் குன்று. (உள்படம்) கவுதம்சிகாமணி (திமுக), பழனிசாமி (அதிமுக), ஹேமராஜன் (நாதக), பரணி பாலாஜி (தவெக)
விழுப்புரம்: திருக்கோவிலூரில் வைணவ தலமான உலகளந்த பெருமாள், சைவத் தலமான வீரட்டானேஸ்வரர் கோயில், திருவெண்ணெய்நல்லூரில் சுந்தரரை தடுத்தாட்கொண்ட தலமான கிருபாபுரீஸ்வரர் கோயில் என ஆன்மிக திருத்தலங்கள் நிறைந்தது திருக்கோவிலூர் சட்டப்பேரவைத் தொகுதி. புகழ்பெற்ற கபிலர் குன்று, ஞானானந்தரின் தபோவனம் போன்றவற்றை உள்ளடக்கியது இத்தொகுதி.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் பேரூராட்சி, ஒன்றியத்தில் உள்ள 20 ஊராட்சிகள், விழுப்புரம் மாவட்டத்துக்கு உட்பட்ட திருக்கோவிலூர் தொகுதிக்குள் வரையறுக்கப்பட்டுள்ளன.
தொகுதி சீரமைப்பில், ரிஷிவந்தியம் தொகுதியில் இருந்த திருக்கோவிலூர் பேரூராட்சி பிரிக்கப்பட்டு திருக்கோவிலூருடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் அரகண்டநல்லூர் பேரூராட்சி, திருவெண்ணெய்நல்லூர் மற்றும் கண்டாச்சிபுரம் வட்டத்தில் உள்ள கிராமங்களை உள்ளடக்கியதாகும்.
விவசாயம்சார்ந்த பூமி. நெல், கரும்பு சாகுபடிக்கு விவசாயிகள் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். தென்பெண்ணையாற்றை நம்பி வாழும் விவசாயிகள் அதிகம். 5 கி.மீட்டருக்கு ஒரு தடுப்பணை வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
விவசாயம் முக்கியத்துவம் பெற்றிருந்தாலும், விவசாயிகளின் வாழ்வு என்பது விளிம்பு நிலையிலேயே தொடர்கிறது. விளை பொருட்களை பாதுகாக்கக் கூடிய சேமிப்பு கிடங்குகள், கட்டுப்படியான விலைகிடைக்காமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.
திருக்கோவிலூரை மையமாக கொண்டு, கூட்டுறவு சர்க்கரை ஆலை கோரிக்கையும் தொடர்ந்த வண்ணம் உள்ளன. மேலும் திருக்கோவிலூரில் உழவர் சந்தையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். கருணாநிதி கொண்டு வந்த உழவர் சந்தை திட்டம், திமுக ஆட்சியிலும் நிறைவேற்றப்படவில்லை.
தொழிற்சாலை இல்லாததால் பெங்களூருவுக்கு கூலித் தொழிலாளர்களாக மக்கள் தஞ்சம் புகுந்து வருகின்றனர். இதேபோல் திருப்பூர், ஈரோடு, கோவைக்கு வேலை வாய்ப்பு தேடி சென்றுள்ளனர். கோவில் நகரம் என அழைக்கப்படும், திருக்கோவிலூரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில், உள்ளூர் தலையீடு தொடர்கிறது.
போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிப்பதால், புறவழிச்சாலையை இணைக்கக் கூடிய புதிய பேருந்து நிலையம் என்பது கானல் நீராகவேபோனது. மாவட்டத்தின் தலைநகரான கள்ளக்குறிச்சிக்கு, சென்றுவர போதிய எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்படவில்லை.
இதனால் தொழில் மற்றும் கல்விக்காக செல்பவர்கள் அவதிப்படுகின்றனர். கண்டாச்சிபுரத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வட்டம் உருவானாலும், அடிப்படை பணிகள் மற்றும் வளர்ச்சி பணிகள் பெரியளவு இல்லை. கபிலர் குன்றை பராமரிக்க வேண்டும் என்கின்றனர் மக்கள்.
திமுக ஆட்சியில் அரசு கலைக் கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி கொண்டு வரப்பட்டது, மாணவ மாணவிகளின் கல்வி வளர்ச்சிக்கு வர பிரசாதமாகும். அதே நேரத்தில், அரசு வேளாண் கல்லூரியை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையும் தொடர்கிறது.
மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டாலும், கூடுதல் எண்ணிக்கையில் மருத்துவர்களை நியமனம் செய்ய வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மருத்துவர் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்பது கோரிக்கையாகும்.
மேலும் அரகண்டநல்லூரில் அரசு மகளிர் பள்ளியை உருவாக்க வேண்டும் மற்றும் அரகண்டநல்லூரில் குற்றவியல் மற்றும் சிவில் நீதிமன்றம் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையும் இருக்கிறது. பிரதான கோரிக்கையான திருக்கோவிலூர் பேரூராட்சி மற்றும் 20 ஊராட்சியை, விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்க வேண்டும் என்ற மக்களின் கோரிக்கை, இத்தேர்தலில் எதிரொலிக்கலாம்.
1952 முதல் 1971 வரை திருக்கோவிலூர் தொகுதி 5 முறை தேர்தலை சந்தித்துள்ளது. ஒரு முறை உழைப்பாளர் கட்சியும், 3 முறை காங்கிரசும், ஒரு முறை திமுகவும் வெற்றி கண்டுள்ளது. இதற்கிடையில் 1967-ல் உருவான முகையூர் தொகுதியுடன் 1971-க்கு பிறகு இணைக்கப்பட்டன.
1967 முதல் 2006 வரை முகையூர் தொகுதி 10 தேர்தலை சந்தித்துள்ளது. இதில் திமுக, அதிமுக தலா 4 முறையும், காங்கிரஸ், பாமக தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. இதில் திமுக வென்ற 4 முறையும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி, அவரது மனைவி பத்மாவதி ஆகியோர் தலா ஒரு முறையும், இவர்களது மகன் ஏ.ஜி.சம்பத் இரு முறையும் வெற்றி பெற்றனர். தொகுதி சீரமைப்புக்கு பிறகு 2011-ல் திருக்கோவிலூர் தொகுதி மீண்டும் உருவானது.
அப்போது அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த தேமுதிக வெற்றி பெற்றது. 2016, 2021 ஆகிய இரு தேர்தல்களிலும் திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி வெற்றி பெற்றுள்ளார். பெண்களுடன் சைவ வைணவ ஒப்பீடு காரணமாக பொன் முடிக்கு வாய்ப்பு வழங்க திமுக தலைமை மறுத்துவிட்டது.
இதனால், திமுக சார்பில் அவரது மகன் கவுதமசிகாமணி போட்டியிடுகிறார். இவர், கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் (2019-2024) எம்.பியாக இருந்தவர். இவரை எதிர்த்து அதிமுக சார்பில் பழனிசாமி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஹேமராஜன், தவெக சார்பில் பரணி பாலாஜி உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர்.
இவர்களில் கவுதமசிகாமணி, பழனிசாமி, ஹேமராஜன் ஆகியோர் உடையார் சமூகத்தினர். பரணி பாலாஜி செங்குந்தர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். வன்னியர்கள், பட்டியலின மக்கள், உடையார், நத்தம உடையார் ஆகியோர் கணிசமாக வாழ்கின்றனர். முகையூர் ஒன்றியத்தில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளன.
இஸ்லாமியர்களும் பரவலாக வாழ்ந்து வருகின்றனர். சிறுபான்மையினர் வாக்குகள் திமுகவுக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. ஆன்மிக ஸ்தலம் என்பதால் பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகளும் சமீபகாலமாக எழுச்சி பெற்றுள்ளது. இவையும், இரட்டை இலையும் அதிமுகவுக்கு கைக்கொடுக்கலாம் என பேசப்படுகிறது.
முதல் தலைமுறை மற்றும் இளைஞர்களின் வாக்குகளை தவெக அதிகளவில் ஈர்க்கும் என கணிக்கப்படுகிறது. நாம் தமிழர் கட்சியும் விவசாயிகள் மற்றும் இளைஞர்களின் வாக்குகளை தக்க வைக்கலாம். அதேநேரத்தில் நடுநிலை வாக்காளர்களே, வெற்றியாளரை தீர்மானிப்பார்கள் என்பதுதான் நிதர்சனம்.
வாக்காளர்கள் விவரம்
ஆண் - 1,21,023
பெண் - 1,19,948
மூன்றாம் பாலினத்தவர் - 32
மொத்த வாக்காளர்கள் - 2,41,003