தமிழக சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசைப் பட்டியலில் 31-வதாக இடம் பெற்றுள்ளது. தாம்பரம் தொகுதி. சென்னையின் நுழைவு வாயிலாக இத்தொகுதி உள்ளது. புகழ்பெற்ற கிறிஸ்தவ கல்லூரி இங்குதான் அமைந்துள்ளது.
மூன்றாவது முனையமாக தாம்பரம் ரயில் நிலையம் விளங்குகிறது. மேலும் விமானப்படை பயிற்சி மையம், மெப்ஸ் தொழில் வளாகம், மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்கள் உள்ளன. மாடம்பாக்கத்தில் 2000 ஆண்டு பழமையான தேனுபுரீஸ்வரர் கோயில் உள்ளது.
இத்தொகுதி திமுகவின் கோட்டையாக கருதப்படுகிறது. கடந்த 1977 முதல் 2021 வரை நடைபெற்ற 11 சட்டப்பேரவை தேர்தல்களில், 7 முறை திமுகவும் 3 முறை அதிமுகவும் வெற்றிபெற்றுள்ளன.
காங்கிரஸ் கட்சி ஒரேயொரு முறை (1991) வென்றது. 2011-ல் அதிமுக சார்பில் போட்டியிட்ட டி.கே.எம். சின்னையா வெற்றிபெற்று அமைச்சரானார். கடந்த 2016, 2021 தேர்தல்களில் திமுக சார்பில் போட்டியிட்ட எஸ்.ஆர்.ராஜா வெற்றி பெற்று எம்எல்ஏவாக உள்ளார்.
தொகுதியில் நிலவும் பிரச்சினைகள்
இத்தொகுதியின் பெரும்பாலான பகுதிகள் மிகக் குறுகலான தெருக்களைக் கொண்டவை. வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு போதிய வாகன நிறுத்த வசதி இல்லாததால், சாலைகளிலேயே வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.
இதனால் நடைபாதைகள், சாலை ஓரங்களில் ஏற்படும் ஆக்கிரமிப்புகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மழைக்காலங்களில் கழிவு நீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு தெருக்களில் நீர் தேங்கும் நிலை ஏற்படுகிறது.
சில நேரங்களில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாகவும் புகார்கள் எழுகின்றன. தினமும் தாம்பரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. 4 ஆண்டுகளுக்கு முன்பு மாநகராட்சியாக தாம்பரம் தரம் உயர்த்தப்பட்டது. அதுமுதல் கழிவுகளால் குப்பை மேலாண்மை செய்வது மாநகராட்சிக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.
நீர்நிலைகள் பாதுகாப்பு - வெள்ள மேலாண்மை, குடிநீர், நிலத்தடி நீர் அபிவிருத்தி மற்றும் கழிவுநீர் வசதி, சாலை மற்றும் போக்குவரத்து மேம்பாடு, அரசு மருத்துவம் மற்றும் கல்வி வசதிகள், வேலைவாய்ப்பு மற்றும் சிறு தொழில் வளர்ச்சி, பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது இத்தொகுதியில் முக்கியத் தேவையாக உள்ளது.
ஜி.எஸ்.டி ரோடுக்கு மாற்றாக 1976-ல் தொடங்கப்பட்ட ஈஸ்டர் பைபாஸ் திட்டம் இன்னும் நிறைவு பெறவில்லை. முடிச்சூர் சாலை, வேளச்சேரி சாலை, கிழக்கு தாம்பரம் முதல் சேலையூர் - கேம்ப் ரோடு வரையிலான சாலைகளை அகலப்படுத்த வேண்டும் என 20 ஆண்டுகளாக வைக்கப்பட்ட கோரிக்கைக்கு இன்னும் தீர்வு எட்டப்படவில்லை.
வேட்பாளர்கள் பின்புலம்
தாம்பரம் தொகுதியில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், பிற மாநிலத்தவர்கள் என பல்வேறு சமூகத்தினர் வாழ்கின்றனர். இந்த முறை தற்போதைய எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜாவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு, புது முகமான மருத்துவர் கிருத்திகா தேவிக்கு சீட் வழங்கப்பட்டது.
அதிமுக சார்பில் கடந்த 2016-ல் போட்டியிட்டு தோல்வி அடைந்த செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் மீண்டும் போட்டியிடுகிறார்.
நாம் தமிழர் கட்சி சார்பில் பேராசிரியர் சு.தமிழ்ச்செல்வியும், தவெக சார்பில் மாவட்டச் செயலாளர் கில்லி சரத்குமாரும் போட்டியிடுகின்றனர். இருப்பினும் இங்கு திமுக, அதிமுக இடையில்தான் கடும் போட்டி நிலவுகிறது.
இந்த தொகுதியில் திமுகவின் கட்டமைப்பு மிகவும் வலுவாக இருக்கிறது. கணிசமாக உள்ள இஸ்லாமிய மக்களின் வாக்குகள் பெரும்பாலும் திமுக பக்கமே சாய வாய்ப்புள்ளதும் திமுகவுக்கு பலம். அதேநேரம் புதுமுகத்துக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதால் திமுகவினரிடையே அதிருப்தி நிலவுவதாகக் கூறப்படுகிறது.
இதை தமக்கு சாதகமாக்க அதிமுக முயன்று வருகிறது. யார் வெற்றி பெற்றாலும், கடந்த தேர்தலைப்போல அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் குறைவாக இருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
வாக்காளர்கள் விவரம்
ஆண் - 1,57,580
பெண் - 1,66,046
மூன்றாம் பாலினத்தவர் - 51
மொத்த வாக்காளர்கள் - 3,23,677