தமிழகம்

சூலூரில் வெற்றி முனைப்பில் திமுக... ‘ஹாட்ரிக்’ வெற்றிக் கனவில் அதிமுக!

இரா.கார்த்திகேயன்

கோவை: கோவை மாவட்டத்தின் ஒரு பகுதி நுழைவு வாயிலாக அமைந்துள்ளது சூலூர் சட்டப்பேரவைத் தொகுதி. சூலூர், இருகூர், கண்ணம்பாளையம், கருமத்தம்பட்டி, மோப்பிரிபாளையம், பள்ளபாளையம், சுல்தான்பேட்டை, செஞ்சேரிமலை ஆகிய பகுதிகளை கொண்டது. மத்திய அரசின் சூலூர் விமானப்படைத்தள பணிமனை தேசிய அடையாளம் என்றாலும், விவசாயத்தையும், விசைத்தறியையும் பிரதானமாக கொண்ட பகுதி.

கடந்த 1952-ம் ஆண்டு நடைபெற்ற முதல் தேர்தலின்போது சூலூர், திருப்பூர் தொகுதியின் கீழ் இருந்தது. 1957-ம் ஆண்டு ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தில் சூலூர் தனி தொகுதியாக உருவாக்கப்பட்டது. 1957, 1962-ம் ஆண்டுகளில் தேர்தல் களை சந்தித்த நிலையில், 1967-ம் ஆண்டு முதல் பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதியில் சூலூர் சேர்க்கப்பட்டது.

பின்னர் 2009-ம் ஆண்டு நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு, மீண்டும் சூலூர் சட்டப்பேரவைத் தொகுதி உருவாக்கப்பட்டது. இத்தொகுதியில் கவுண்டர், நாயுடு, அருந்ததியர், தேவர், செட்டியார் சமுதாய மக்கள் கணிசமாக வசிக்கிறார்கள். கோவை மாவட்டத்தில் அதிமுக தொடர் வெற்றியை தக்க வைக்கும் தொகுதி என்பது பெரும்பலம்.

          

விவசாயம், விசைத்தறியில் தொடர் பிரச்சினைகள் இருக்கின்றன. விசைத் தறியாளர்களின் வாழ்வாதாரம் மேம்பட நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் உள்ளன. விவசாயிகள், விசைத்தறியாளர்களின் போராட்டத்திற்கு எம்எல்ஏ ஆதரவளித்தார். ஆனால் தீர்வை தரவில்லை என்கின்றனர், தொகுதி மக்கள்.

தொகுதிக்கு உட்பட்ட பல இடங்களில் நொய்யலின் உப்புத்தன்மை 4,000-ம் டிடிஎஸ்ஸூக்கு மேல் சென்றுவிட்டது. சூலூர் குளத்தையும் தூர் வாரவில்லை. தண்ணீரை சுத்திகரிப்பதற்கு எந்த நடவடிக்கையும் இல்லை. சூலூரில் அரசு கலை அறிவியல் கல்லூரி வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பல ஆண்டுகளாக கானல்நீராகவே இருக்கிறது.

இதனால் ஏழை மாணவர்கள் கோவை அரசு கலை அறிவியல் கல்லூரிக்கு செல்கிறார்கள். தனியார் கல்லூரிகள் அதிகம் இருப்பதால் அரசு கல்லூரி கொண்டுவருவதில் சுணக்கம் காட்டுவதாகவும் பேச்சுகள் உலவுகின்றன.

சூலூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதி என்பதால், திருச்சி மற்றும் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு இந்த வழியாக தான் செல்ல வேண்டும். விரிவான சாலை வசதி இல்லாததால், கடுமையான போக்குவரத்து நெருக்கடியும், முகூர்த்த நாட்களில் வாகனங்கள் இயக்க முடியாத அளவுக்கு போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

சூலூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். கருமத்தம்பட்டி பகுதியில் தீயணைப்பு நிலையம் கொண்டு வரப்பட்டது. சூலூர் குளத்தை தூர்வாரி அதில் படகு குழாம் அமைக்கும் பணிகள் பல ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடந்து வருகின்றன. பேரூராட்சியில் பூங்காக்களை முறையாக பராமரிப்பதில்லை என்ற புகார்கள் உள்ளன.

இதுவரை வென்றவர்கள்

கடந்த 2011-ம் ஆண்டு முதல் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சியாக இருந்த தேமுதிக வேட்பாளர் தினகரன் வெற்றி பெற்றார். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் 2-ம் இடத்தை பிடித்தார்.

கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலில் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஆர்.கனகராஜ்வெற்றி பெற்றார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட வி.எம்.சி.மனோகரன் 2-ம் இடம் பெற்றார். தொடர்ந்து, ஆர்.கனகராஜ் உயிரிழந்ததால், கடந்த 2019-ம்ஆண்டு இடைத்தேர்தல் நடைபெற்றது.

இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வி.பி.கந்தசாமி ஒரு லட்சத்து 782 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் பொங்கலூர் நா.பழனிசாமி தோல்வியடைந்தார்.

இந்நிலையில், 2021-ம் ஆண்டு தேர்தலிலும் வி.பி.கந்தசாமிக்கு அதிமுக தலைமை சூலூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்தது. ஒரு லட்சத்து 18,968 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்த வெற்றி மூலமாக மறுசீரமைப்புக்குப் பிறகு உருவாக்கப்பட்ட தொகுதி அடிப்படையில் அனைத்து தேர்தல்களிலும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது 3-ம் முறையாக வி.பி.கந்தசாமி வாய்ப்பை பெற்றுள்ளார். திமுகவில் கோவை தெற்கு மாவட்ட செயலாளரான தளபதி முருகேசன் போட்டியிடுகிறார். இருவரும் தொகுதிக்கு நன்கு அறிமுகமானவர்கள்.

ஹாட்ரிக் வெற்றிக்கு அதிமுகவும், முதல்வெற்றி முனைப்பில் திமுகவும் தீவிர களப்பணியாற்றி வருகின்றன. சூலூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் ராஜசேகரும், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சுகுமாரும் வாக்குகளை பிரித்தெடுப்பதை பொறுத்து வெற்றிவாய்ப்பு இருக்கும்.

வாக்காளர்கள் விவரம்

ஆண் - 1,46,493

பெண் - 1,58,077

3-ம் பாலினத்​தவர் - 102

மொத்த வாக்​காளர்கள் - 3,04,672

SCROLL FOR NEXT