ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டி சர்வதேச அளவில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாகும். அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தென்னிந்தியாவின் இரண்டாவது உயரமான தொட்ட பெட்டா சிகரம், ரோஜா பூங்கா குறிப்பிடத்தக்க அம்சங்கள்.
ஊட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் ஊட்டி, குந்தா ஆகிய இரண்டு வட்டங்களும், ஊட்டி நகராட்சியும், குந்தா, நஞ்சநாடு, சோலூர் ஆகிய 3 பேரூராட்சிகளும், 9 சிற்றூராட்சிகளும் உள்ளன.
நகரப் பகுதிகளை விட கிராமப் பகுதிகளே அதிக அளவில் காணப்படும் இத்தொகுதியில் 75 சதவீதத்தினர் விவசாயத்தையும், 25 சதவீதத்தினர் சுற்றுலாவையும் சார்ந்துள்ளனர். இத்தொகுதியில் பெரும்பான்மையாக படுகர் சமுதாயத்தினரும், எஞ்சியவர்களில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், மலையாளிகள், கன்னடர்கள் உள்ளிட்டோர் உள்ளனர்.
தொகுதியில் நிலவும் பிரச்சினைகள்
சர்வதேச அளவில் புகழ் பெற்ற ஊட்டி சுற்றுலா தலத்துக்கு ஆண்டுதோறும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால், இவர்களுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் ஏதுமில்லை. பல ஆண்டுகளாக கேபிள் கார், ஹெலிகாப்டர் சேவை என சுற்றுலாவை மேம்படுத்த திட்டம் கொண்டு வரப்படும் என அறிவிப்பு மட்டுமே செய்யப்படுகிறது.
இதுவரை சுற்றுலா மேம்பாட்டுக்கான புதிய திட்டங்கள் இல்லை. இதனால் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ‘பூங்கா...போட்டிங்....தொட்ட பெட்டா...ரிப்பீட்டு’ என பார்த்து சளித்துப்போன இடங்களையே மீண்டும் மீண்டும் பார்த்து செல்கின்றனர்.
அரசியல் கட்சியினர் தேர்தல் வாக்குறுதிகளில் தெரிவித்த ஊட்டிக்கு ஹெலிகாப்டர் சேவை, மருத்துவ ஹெலிகாப்டர் சேவை, ரோப் கார் சேவை, நகரத்தில் விசாலமான வாகன நிறுத்துமிடம் ஆகிய திட்டங்கள் எல்லாம் இன்னமும் கனவாகவே உள்ளன.
அதேபோல, தங்கும் விடுதிகள், சுற்றுலா வாகனங்களை இயக்குபவர்கள், கடைகள் நடத்துபவர்கள், சுற்றுலா வழிகாட்டிகள் உள்ளிட்ட சுற்றுலா வர்த்தகத்தை நம்பி வாழ்க்கை நடத்துபவர்களுக்கு வருவாய் பெருக்கத்துக்கான திட்டங்களை கண்டறிந்து செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளூர் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
களம் காணும் வேட்பாளர்கள்
ஊட்டி தொகுதியில் இதுவரை நடைபெற்றுள்ள தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி 10 முறையும், அதிமுக, திமுக தலா 2 முறையும், சுதந்திரா கட்சி ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. இந்த தொகுதியில் வெற்றி பெற்ற அனைவருமே படுகர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்.
சட்டப்பேரவைத் தேர்தலில் ஊட்டி தொகுதியில் தேசிய கட்சிகளான பாஜகவும், காங்கிரஸும் தற்போது இரண்டாம் முறையாக நேருக்கு நேர் மோதுகின்றன. திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளராக உயிலட்டி பி.ராமச்சந்திரன் முதன் முறையாக போட்டியிடுகிறார்.
இவரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் 79 வயதான மு.போஜராஜன் இரண்டாம் முறையாக போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் ரகுபதி பீமன், தவெக சார்பில் ஆர்.இப்ராஹிம் மற்றும் சுயேச்சைகள் களத்தில் உள்ளனர். படுகரின மக்கள் அதிகம் வசிக்கும் தொகுதி என்பதால், படுகரினத்தவர்களே வேட்பாளர்களாக களம் இறக்கப் படுகின்றனர்.
பலம், பலவீனம்
ஊட்டி தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏ ஆர்.கணேஷ் மீது அதிருப்தி நிலவுவதால், பாஜக அதை அறுவடை செய்ய காத்திருக்கிறது. இங்கு அதிமுக கடந்த ஓராண்டாக தேர்தல் பணியாற்றியது. இதுவும் பாஜகவுக்கு பலம் சேர்க்கும்.
மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சிகளின் வாக்குகள், சிறுபான்மையினர் வாக்குகளை காங்கிரஸ் கட்சி குறி வைத்துள்ளது.
அதேநேரம், தவெகவும் சிறுபான்மையினர் மற்றும் முதல்முறை வாக்காளர்களை தன்வசப்படுத்த முனைப்பாக உள்ளது. புதிதாக களமிறங்கும் தவெக பெறும் வாக்கு சதவீதத்தை பொறுத்தே ஊட்டியில் கை ஓங்குமா, தாமரை மலருமா என்பது தெரியவரும்.
வாக்காளர்கள் விவரம்
ஆண் - 89,066
பெண் - 98,348
3-ம் பாலினத்தவர் - 11
மொத்த வாக்காளர்கள் - 1,87,425