தலைக்காவிரியில் புறப்பட்டு தமிழகம் முழுவதும் செழிக்க வைக்கும் காவிரி ஆறு கடலில் சங்கமிக்கும் பகுதி இடம்பெற்றிருப்பது மயிலாடுதுறை தொகுதி. இங்கு பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. நெல் பயிர் சாகுபடி அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தோட்டக்கலை பயிர்கள் குறைந்த அளவுக்கு மட்டுமே சாகுபடி செய்யப்படுகிறது.
இந்தத் தொகுதியில் வன்னியர், ஆதிதிராவிடர்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். மயிலாடுதுறை தொகுதி 1952 இரட்டை உறுப்பினர் முறையில் இருந்து தேர்தலை சந்தித்து வருகிறது.
இதுவரை நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ், திமுக தலா 5 முறையும், அதிமுக 2, தமாகா, பாஜக, தேமுதிக, சுயேச்சை தலா 1 முறையும் வெற்றிபெற்றுள்ளன. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.ராஜகுமார் 73,642 வாக்குகளும், பாமக வேட்பாளர் சித்தமல்லி ஆ.பழனிச்சாமி 70,900 வாக்குகளும் பெற்றனர்.
2,742 வாக்குகள் வித்தியாசத்தில் எஸ்.ராஜகுமார் வெற்றிபெற்றார். இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஜமால் முகமது யூனூஸ், அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் மீண்டும் சித்தமல்லி ஆ.பழனிச்சாமி, நாதக சார்பில் மாநில சுற்றுச் சூழல் பாசறை இணை செயலாளர் கி.காசிராமன், தவெக சார்பில் சென்னையை சேர்ந்த ஹாரூன் ரசீது ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
காங்கிரஸ் எம்எல்ஏ ராஜகுமாருக்கு கட்சியில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாத நிலையில், தஞ்சாவூரை சேர்ந்த ஜமால் முகமது யூனூஸ் இங்கு களம் காண்கிறார். கடந்த 2021 தேர்தலில் 2,742 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்விஅடைந்த பாமக வேட்பாளர் பழனிச்சாமி, இந்த முறை தொகுதியை கைப்பற்றும் வகையில் முழு வீச்சில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நாதக வேட்பாளர் கி.காசிராமன் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
தவெக வேட்பாளர் சி.எஸ்.ஹாரூன் ரஷீத் தற்போது தொகுதியில் உள்ள முக்கியஸ்தர்களை சந்தித்து ஆதரவு திரட்டிவருகிறார். இங்கு காங்கிரஸுக்கும், பாமகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களின் எதிர்பார்ப்புகள்
* மயிலாடுதுறையில் புதை சாக்கடை பிரச்சினை தீர்க்கப்படாமல் நீடித்து வருகிறது.
* தலைஞாயிறு என்பிகேஆர்ஆர் கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் இயங்க செய்ய வேண்டும்.
* மருத்துவக் கல்லூரி வேண்டும்.
* நிரந்தர நெல் சேமிப்புக் கிடங்குகள், விளைபொருட்களை மதிப்புக்கூட்டிய பொருளாக மாற்றி நியாயமான விலை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
* முடிகண்டநல்லூர், சித்தமல்லி பகுதிகளில் கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும்.
* தட்டுப்பாடு இன்றி கொள்ளிடம் கூட்டு குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்.
இதுவரை வென்றவர்கள்
1952 - ஏ.வேலு, கே.ஆர்.சம்பந்தம் - சுயேச்சை
1957 - ஜி.நாராயணசாமி நாயுடு பி.ஜெயராஜ் - காங்கிரஸ்
1962 - ஜி.நாராயணசாமிநாயுடு - காங்கிரஸ்
1967 - என்.கிட்டப்பா - திமுக
1971 - என்.கிட்டப்பா - திமுக
1977 - என்.கிட்டப்பா - திமுக
1980 - என்.கிட்டப்பா - திமுக
1984 - என்.சத்தியசீலன் - திமுக (இடைத்தேர்தல்)
1984 - எம்.தங்கமணி - அதிமுக
1989 - ஏ.செங்குட்டுவன் - திமுக
1991 - எம்.எம்.எஸ்.அபுல்ஹசன் - காங்கிரஸ்
1996 - எம்.எம்.எஸ்.அபுல்ஹசன் - தமாகா
2001 - ஜெக.வீரபாண்டியன் - பாஜக
2006 - எஸ்.ராஜகுமார் - காங்கிரஸ்
2011 - ஆர்.அருள்செல்வன் - தேமுதிக
2016 - வி.ராதாகிருஷ்ணன் - அதிமுக
2021 - எஸ்.ராஜகுமார் - காங்கிரஸ்
வாக்காளர்கள் விவரம்:
ஆண் வாக்காளர்கள் - 1,14,613
பெண் வாக்காளர்கள் - 1,17,979
மூன்றாம் பாலினத்தவர் - 26
மொத்த வாக்காளர்கள் - 2,32,618