தமிழகம்

கந்தர்வக்கோட்டை தொகுதியில் களம் காணும் பங்காளிகள் - முந்துவது யார்?

செய்திப்பிரிவு

கந்தர்வக்கோட்டை தொகுதியில் கீரனூர், கறம்பக்குடி பேரூராட்சிகள், கந்தர்வக்கோட்டை ஒன்றியம், குன்றாண்டார்கோவில், கறம்பக்குடி ஒன்றியங்களில் சில பகுதிகளும் உள்ளன.

விவசாயமே பிரதான தொழிலாக உள்ள இத்தொகுதியில் முக்குலத்தோர், முத்தரையர், பட்டியலினத்தவர், யாதவர், வெள்ளாளர் பிரதானமாக உள்ளனர்.தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு நடைபெற்ற 3 தேர்தல்களில் 2 தேர்தல்களில் அதிமுகவும், கடந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வென்றன.

கடந்த தேர்தலில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம்.சின்னதுரை 69,710 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் எஸ்.ஜெயபாரதி 56,989 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

அமமுக வேட்பாளர் பி.லெனின் 12,840 வாக்குகள், நாதக வேட்பாளர் எம்.ரமிலா 12,661 வாக்குகள், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் வேட்பாளர் பழ.ஆசைத்தம்பி 1,271 வாக்குகள் பெற்றனர். இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் மீண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம்.சின்னதுரை போட்டியிடுகிறார்.

அதேபோல, அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளர் சி.உதயகுமார் போட்டியிடுகிறார். இருவரும் ஒரே கிராமத்தைச் சேர்ந்த பங்காளிகளாவர். கடந்த 2 தேர்தல்களில் போட்டியிட்ட அனுபவம், அதிமுக வாக்குகளை தவெக வேட்பாளர் என்.சுப்பிரமணியன் பிரிப்பது, 5 ஆண்டுகள் தொகுதியில் செய்த பணிகள் மற்றும் திமுக கூட்டணியின் பலத்தால் தொகுதியை மீண்டும் தக்கவைத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் எம்.சின்னதுரை உள்ளார்.

கடந்த தேர்தலில் 12,721 வாக்குகள் வித்தியாசத்தில்தான் சின்னதுரை வெற்றி பெற்றார். எனவே, அந்த தேர்தலில் 12,840 வாக்குகள் பெற்ற அமமுக, அதிமுக கூட்டணியில் இருப்பதும், குடிநீர், சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகள்கூட கிடைக்கவில்லையே என்ற அதிருப்தி, மக்களிடையே பாகுபாடு காட்டியதாக எழுந்துள்ள அதிருப்தி வாக்குகளும் தனக்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தும் என பாஜக வேட்பாளர் சி.உதயகுமாரின் கணிப்பாக உள்ளது.

இவர்களுக்கு, கொஞ்சமும் சளைக்காமல் தவெக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான என்.சுப்பிரமணியன், நாதக வேட்பாளர் டி.நதியாவும் களத்தில் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.

தொகுதியில் உள்ள பிரச்சினைகள்

* முந்திரி பருப்பில் இருந்து மதிப்புக் கூட்டு பொருள் தயாரிப்பு தொழிற்சாலை ஏற்படுத்த வேண்டும். அரசு மருத்துவமனை, தகர ஷெட்டுக்குள் செயல்பட்டு வரும் பேருந்து நிலையத்தை மேம்படுத்த வேண்டும்.

* காவிரி பாசன வசதி ஏற்படுத்த வேண்டும்.

* நூலகங்களை போட்டித் தேர்வு பயிற்சி மையங்களாக மேம்படுத்த வேண்டும்.

* கறம்பக்குடியில் சுற்றுவட்டச் சாலை அமைக்க வேண்டும்.

* சிப்காட் தொழிற்பேட்டை பணிகளை தொடங்க வேண்டும்.

* கிராமங்கள் தோறும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும்.

இதுவரை வென்றவர்கள் தொகுதி மறுசீரமைப்புக்கு முன்பு குளத்தூர் தொகுதி:

  • 1977- வீ.சின்னையா - காங்கிரஸ்

  • 1980 - த.மாரிமுத்து - அதிமுக

  • 1984 - த.மாரிமுத்து - அதிமுக

  • 1989 - வெ.ராசு - அதிமுக

  • 1991 - சி.குழந்தைவேலு - அதிமுக

  • 1996 - கவிதைப்பித்தன் - திமுக

  • 2001 - ஏ.கருப்பாயி - அதிமுக

  • 2006 - என்.சுப்பிரமணியன் - அதிமுக தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு கந்தர்வக்கோட்டை தொகுதி:

  • 2011 - என்.சுப்பிரமணியன் - அதிமுக

  • 2016 - பா.ஆறுமுகம் - அதிமுக

  • 2021 - எம்.சின்னதுரை - மார்க்சிஸ்ட் கம்யூ.

வாக்காளர்கள் எண்ணிக்கை

  • ஆண்கள் - 98,651

  • பெண்கள் - 97,444

  • இதரர் - 9

  • மொத்தம் - 1,96,104

SCROLL FOR NEXT