திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி (தனி) தொகுதியானது, கொங்கு மண்டலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில், திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோயில் என 2 முக்கியத் திருத்தலங்களை உள்ளடக்கியுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தொகுதி வரிசையில் 112-வது இடத்தைப் பெற்றுள்ள அவிநாசி (தனி) தொகுதியில் திருமுருகன்பூண்டி நகராட்சி, அவிநாசி, அன்னூர் பேரூராட்சிகள், 30-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளை உள்ளடக்கியுள்ளது.
அன்னூர் பேரூராட்சி கோவை மாவட்டத்துக்கு உட்பட்டதாகும். இந்தத் தொகுதியில் விவசாயம், விசைத்தறி, நூல் மில்கள், பம்பு செட் உற்பத்தி, பின்னலாடை உற்பத்தி, சிற்பங்கள் தயாரிப்பு ஆகியவை பிரதான தொழிலாக உள்ளன.
அதிமுக 8 முறை வெற்றி
அவிநாசி தொகுதியில் கடந்த 1967-ம் ஆண்டு முதல் தற்போது வரையில் 15 முறை தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில், அதிகபட்சமாக அதிமுக 8 முறை வெற்றி பெற்றுள்ளது.
இதற்கு அடுத்தபடியாக காங்கிரஸ் 3 முறையும், திமுக, இந்திய கம்யூனிஸ்ட், சுதந்திரா கட்சி, சுயேச்சை வேட்பாளர்கள் தலா ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் ப.தனபால் 50,902 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
திமுக சார்பில் போட்டியிட்ட அதியமான் ராஜூ 66,382 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தையும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஷோபா 13,256 வாக்குகளையும், மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்ட ஏ.வெங்கடேஸ்வரன் 8,379 வாக்குகளையும், தேமுதிக வேட்பாளர் கே.மீரா 2,577 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.
நோட்டாவுக்கு 2,372 வாக்குகள் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த தொகுதியில் நடப்பு சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக சார்பில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக வேட்பாளரான இளம் மருத்துவர் வி.கோகிலாமணியும், நாம் தமிழர் கட்சி சார்பில் வி.மேனகாவும், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் எஸ்.கமலியும் போட்டியிடுகின்றனர்.
இங்கு ஆதிதிராவிடர் சமூகத்தினரும், அடுத்தபடியாக கொங்கு வேளாளர்களும், நாயக்கர், செட்டியார் உள்ளிட்ட பல்வேறு சமூகத்தினரும் வாக்காளர்களாக உள்ளனர்.
தொகுதியில் நிலவும் பிரச்சினை
இந்தத் தொகுதியில் விவசாயிகளின் 40 ஆண்டுகால கோரிக்கையான அத்திக்கடவு- அவிநாசி திட்டம் நிறை வேற்றப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் விடுபட்டுள்ள குளம், குட்டைகளையும் சேர்க்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவிநாசி, திருமுருகன்பூண்டி பகுதிகளில் மட்டும் 120-க்கும் மேற்பட்ட சிற்பக்கலைக்கூடங்கள் உள்ளன.
இவற்றில் பணியாற்றி வரும் சிற்பக் கலைஞர்களுக்கு தனி வாரியம் அமைத்து மருத்துவம், ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகளை வழங்க வேண்டும். திருமுருகன்பூண்டியில் சிற்பக்கல்லூரி அமைக்க வேண்டும். அவிநாசி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும். குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதே இத்தொகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
பாஜக - திமுக நேரடிப் போட்டி
அவிநாசி (தனி) தொகுதியைப் பொறுத்தவரையில் பாஜக, திமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என 4 முக்கிய வேட்பாளர்களிடையே போட்டி நிலவுகிறது. எனினும், பாஜக சார்பில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் போட்டியிடுவதால் அவருக்கு ஆதரவாக பாஜக, அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி தலைவர்கள் மத்திய அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளனர்.
அதேபோல, திமுக வேட்பாளரான வி.கோகிலாமணிக்கு ஆதரவாக திமுக, காங்கிரஸ், தேமுதிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் என கூட்டணிக் கட்சி தலைவர்களும் மாநில அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆகவே, இந்தத் தொகுதியில் பாஜக-திமுக இடையே நேரடிப்போட்டியாக மாறியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
வாக்காளர்கள் விவரம்
ஆண் - 1,19,841
பெண் - 1,30,496
3-ம் பாலினத்தவர் - 9
மொத்த வாக்காளர்கள் - 2,50,346