திருவண்ணாமலை: ‘பட்டு நகரம்’ என்ற வரலாற்றுச் சிறப்பைப் பெற்றது திருவண் ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி சட்டப் பேரவை தொகுதி. தமிழக சட்டப்பேரவை தொகுதி களில் 67-வது இடத்தில் உள்ளது. சோழர், பல்லவர், சம்புவராயர்கள், விஜயநகரப் பேரரசர்கள், மராட்டியர், ஆற்காடு நவாப் போன்றவர்களின் ஆளுமையிலிருந்த பகுதி இது.
வரலாற்றுப் பெருமைமிக்க ஆரணி கோட்டை மற்றும் கைலாசநாதர் கோயில் ஆகியவை இங்கு அமைந்துள்ள சுற்றுலா இடங்களாக உள்ளன. ஆரணி என்றாலே, உலகப் புகழ்பெற்ற பட்டுச் சேலை உற்பத்தி, ஆரணி மற்றும் களம்பூரில் தரமான அரிசி உற்பத்தி பெயர் பெற் றது.
இங்கு, பட்டுப் புடவைகள் மற் றும் விவசாயப் பொருட்களின் உற் பத்தி வர்த்தகத்தில் மாநில அளவில் முன்னணியில் உள்ளது. இந்தியாவில் பட்டு உற்பத்தி செய்யும் தொகுதிகளில் ஒன்றாக ஆரணி உள்ளது.
ஆரணி தொகுதியில், ஆரணி நகராட்சி, கண்ணமங்கலம் பேரூராட்சி மற்றும் 89 கிராம ஊராட்சிகள் அடங்கியுள்ளன. இந்த தொகுதியில் முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் உள்ளனர்.
அடுத்தபடியாக வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களும், மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் இதர சமூகத்தினரும் பரவலாக இருந்து வருகின்றனர். இந்த தொகுதி யில் விவசாயம், நெசவுத் தொழில், அரிசி ஆலை உள்ளிட்டவை பல்வேறு தொழில்களில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த தொகுதியில் இதுவரை 16 சட்டப் பேரவை தேர்தல்கள் நடை பெற்றுள்ளன. அதிமுக 7 முறையும், திமுக 5 முறையும் வெற்றி பெற்றுள்ளன. மேலும், தேமுதிக, சுயேட்சை, பொது நலக்கட்சி, காங்கிரஸ் தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.
2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுக சார்பில் பெண் வேட்பாளர் மகாலட்சுமி போட்டியிடுகிறார். அதிமுக வேட்பாளராக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெயசுதாவும், தவெக வேட்பாளராக வெங்கடேசன் குமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக தவமணி உட்பட 24 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
திமுக வேட்பாளர் மகாலட்சுமி திமுக வின் 5 ஆண்டுகால சாதனை, ஆரணி தொகுதியில் ஆரணி-பழைய ஆற்காடு சாலையில் ரூ.19 கோடியில் புதிய பாலம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளைத் தெரிவித்து வாக்கு சேகரித்து வருகிறார்.
அதேபோல் அதிமுக வேட்பாளர் ஜெயசுதா, அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள், திமுகவின் நிறைவேற்றாத தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் அதிமுக வின் தேர்தல் வாக்குறுதிகளைத் தெரி வித்து வாக்கு சேகரித்து வருகிறார். வழக் கம்போல், தவெக, நாம் தமிழர் கட்சியினர் தங்களின் தேர்தல் வாக்குறுதிகளைத் தெரிவித்துத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நீண்டநாள் கோரிக்கைகள்
* திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து சில பகுதிகளைப் பிரித்து ஆரணியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும்.
* ஆரணியில் பட்டுப் பூங்கா அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
* அரசு கலைக் கல்லூரி அமைத்தல், அரசு மருத்துவமனையைத் தரம் உயர்த்த வேண்டும்.
* ஆரணியில் பராமரிப்பின்றி உள்ள பழங் கால அரண்மனையைப் புதுப்பித்துப் பாதுகாக்க வேண்டும்.
* ஆரணி நகராட்சியில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, பேருந்து நிலையத்தை விரிவுபடுத்த வேண்டும்.
ஆரணி தொகுதியில் வென்றவர்கள்
1951 - கண்ணன் - பொது நல கட்சி
1957 - துரைசாமி - சுயேச்சை
1962 - கோதண்டராம பாகவதர் - காங்கிரஸ்
1967 - நரசிம்மன் - திமுக
1971 - நரசிம்மன் - திமுக
1977 - அர்ச்சுனன் - அதிமுக
1980 - சண்முகம் - அதிமுக
1984 - சின்னக்குழந்தை - அதிமுக
1989 - தயாளன் - திமுக
1991 - ஜெய்சன் ஜேக்கப் - அதிமுக
1996 - சிவானந்தம் - திமுக
2001 - கே.இராமச்சந்திரன் - அதிமுக
2006 - சிவானந்தம் - திமுக
2011 - பாபு முருகவேல் - தேமுதிக
2016 - சேவூர் ராமச்சந்திரன் - அதிமுக
2021 - சேவூர் ராமச்சந்திரன் - அதிமுக
வாக்காளர்கள் விவரம்
ஆண் - 1,24,166
பெண் - 1,30,759
மூன்றாம் பாலினத்தவர் - 38
மொத்த வாக்காளர்கள் - 2,54,963