ஆலங்குடி, கீரமங்கலம் பேரூராட்சிகள், திருவரங்குளம் ஒன்றியம் முழுவதும், அறந்தாங்கி ஒன்றியத்தில் 32 ஊராட்சிகளை கொண்டுள்ளது ஆலங்குடி தொகுதி. விவசாயம் நிறைந்த பகுதி. பலாப்பழம், மரங்கள், கடலை சாகுபடி சிறப்பு பெற்று விளங்குகிறது.
முத்தரையர், முக்குலத்தோர், பட்டியலினத்தவர், சிறுபான்மையினர் உள்ளனர். இத்தொகுதியில், திமுக 6 முறை, அதிமுக 5 முறை, இந்திய கம்யூனிஸ்ட் 1 முறை வெற்றி பெற்றுள்ளன.
மேலும், 1996-ல் அதிமுகவில் சீட் கிடைக்காக விரக்தியில் சுயேச்சையாக போட்டியிட்ட அ.வெங்கடாசலம் வெற்றி பெற்றார். கடந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் 87,935 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் தர்ம தங்கவேல் 62,088 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.
நாதக வேட்பாளர் சி.திருச்செல்வம் 15,477 வாக்குகளும், அமமுக வேட்பாளர் டி.விடங்கர் 2,924 வாக்குகளும் பெற்றனர்.
இந்த தேர்தலில் மீண்டும் 3-வது முறையாக போட்டியிடும் திமுக வேட்பாளர் சிவ.வீ.மெய்யநாதன், தொகுதியில் பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்டு வந்த அரசு கலை அறிவியல் கல்லூரி, போட்டித் தேர்வு பயிற்சி மையம், துணை மின்நிலையங்கள், மினி ஸ்டேடியம், அரசுப் பள்ளிகளுக்கு புதிய கட்டிடங்கள், கால்வாய் மேம்பாடு, சாலை மேம்பாடு போன்ற பணிகள் நிறைவேற்றப்பட்டு இருப்பது, குளிர்பதனக் கிடங்கு, சிட்கோ போன்ற திட்டங்களுக்கான பணிகள் துறை சார்ந்த நிர்வாக நிலையில் நடைபெற்று வருவதுடன், மக்களிடம் தான் எளிமையாக நடந்து கொண்டது, அதிமுகவுக்குள் உள்ள உட்கட்சி புகைச்சல் ஆகியவையும் தனக்கு ஹாட்ரிக் வெற்றியைக் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார்.
அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் திருவரங்குளம் ஒன்றியக் குழுத் தலைவரின் மகன் தன.விமல், ஆலங்குடி தொகுதி அதிமுகவுக்கு செல்வாக்கு மிகுந்த தொகுதி என்பதால், அதிமுகவினரின் வாக்குகளை சிந்தாமல் பெறுவதும், திமுக ஆட்சியில் உள்ள அதிருப்தி வாக்குகளும் தனக்கு கூடுதல் பலம் என விமல் நம்பிக்கையாக உள்ளார்.
மேலும், நாதக வேட்பாளர் ஆர்.ராஜாராம், தவெக வேட்பாளர் கந்தசாமி ஆகியோரும் நம்பிக்கையுடன் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
மக்களின் எதிர்பார்ப்புகள்
* பலாப்பழத்துக்கு புவிசார் குறியீடு பெறுவதுடன், பலாப்பழத்தை மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* ஆலங்குடியில் புறவழிச் சாலை பணியை நிறைவேற்ற வேண்டும்.
* அரசு நவீன அரசி ஆலை அமைக்க வேண்டும்.
* ஆற்றுப் பாசன வசதி ஏற்படுத்த வேண்டும்.
* காவலர் பயிற்சி மையம் ஏற்படுத்த வேண்டும்.
* காய், கனிகளை அரசே கொள்முதல் செய்ய வேண்டும்.
* மரங்களுக்கு இடையே செல்லும் மின் கம்பிகளால் அடிக்கடி மின் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க மின் கம்பிகளை அகற்றி வயர் மூலம் மின் விநியோகம் செய்ய வேண்டும்.
இதுவரை வென்றவர்கள்
1957 - சின்னையா, அருணாசலம் - திமுக
1962 - பி.முருகையன் - திமுக
1967 - கே.வி.சுப்பையா- திமுக
1971 - கே.வி.சுப்பையா - திமுக
1977 - டி.புஷ்பராஜ் - காங்கிரஸ்
1980 - பி.திருமாறன் - அதிமுக
1984 - அ.வெங்கடாசலம் - அதிமுக
1989 - கே.சந்திரசேகரன் - திமுக
1991 - எஸ்.சண்முகநாதன் - அதிமுக
1996 - அ.வெங்கடாசலம் - சுயேச்சை
2001 - அ.வெங்கடாசலம் - அதிமுக
2006 - எஸ்.ராஜசேகரன் - இ.கம்யூ.
2011 - கு.ப.கிருஷ்ணன் - அதிமுக
2016 - சிவ.வீ.மெய்யநாதன் - திமுக
2021 - சிவ.வீ.மெய்யநாதன் - திமுக
வாக்காளர்கள் எண்ணிக்கை
ஆண்கள் - 1,04,833
பெண்கள் - 1,07,306
மொத்தம் - 2,12,139