சென்னை: தமிழகம் முழுவதும் நச்சுக்கழிவு மேலாண்மை நிலையங்களில் தீயணைப்பு துறையுடன் இணைந்து ஒருங்கிணைந்த தணிக்கை நடத்த வேண்டும் என்று மாசுக்கட்டுப்பாடு வாரியத்துக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள நச்சுக்கழிவு மேலாண்மை நிலையத்தில், ரசாயனக் கழிவுக் குவியல் ஒன்றில் தீப்பிடித்ததாகவும், அதனால் நச்சுப் புகையானது கிராமங்களைச் சூழ்ந்து பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதாகவும் கடந்த 2024-ம் ஆண்டு மே மாதம் நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது.
அதன் அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தது. இது தொடர்பாக மாசுக்கட்டுப்பாடு வாரியம் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: நச்சுக்கழிவு மேலாண்மை நிறுவனத்தில் கடந்த 2024-ம் ஆண்டு மே 19-ம் தேதி பிற்பகல் 1 மணி அளவில், சேமிப்புக் கிடங்கில் தீப்பிடித்தது.
உடனே உலர் வேதி பொடிகளைத் தூவியதாலும், தானியங்கி நீர் தெளிப்பு அமைப்பும் உடனடியாக செயல்பட்டதாலும், தீயணைப்புத் துறை உடனடியாக செயல்பட்டதாலும், இரவு 8.30 மணிக்குள் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
பரிந்துரைகள்
தீப்பற்றியது தொடர்பாக விளக்கம் கேட்டு, அந்த நிறுவனத்துக்கு நோட்டீஸும் வழங்கப்பட்டது. இதுபோன்ற தீ விபத்துகளைத் தடுக்க தீ, வெடி, நச்சுத் தீர்வு நிறுவனம் (FET) தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் ஆய்வு செய்து பல்வேறு பரிந்துரைகளை வழங்கியது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கின் தீர்ப்பை, அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, தொழில்நுட்ப உறுப்பினர் பிரசாந்த் கார்கவா ஆகியோர் கடந்த வாரம் வழங்கினர். அதில் கூறியிருப்பதாவது:
விதி மீறினால் நடவடிக்கை
நச்சுக்கழிவு மேலாண்மை நிறுவனம், எஃப்இடி நிறுவனம் வழங்கிய பரிந்துரைகளை பின்பற்ற வேண்டும். பிளாஸ்டிக் தொடர்பான பொருட்களை பாதுகாப்பாக அங்கீகரிக்கப்பட்ட சிமென்ட் தொழிற்சாலைகளுக்கு அனுப்ப வேண்டும்.
மாசுக்கட்டுப்பாடு வாரியம், தீயணைப்புத் துறையுடன் இணைந்து, தமிழகம் முழுவதும் உள்ள அபாயகர கழிவுகளைக் கையாளும் நிறுவனங்களில் தீ விபத்து தடுப்பு தொடர்பாக ஒருங்கிணைந்த தணிக்கையை நடத்த வேண்டும்.
விதிகளை பின்பற்றாத நிறுவனங்கள் மீது மாசுக்கட்டுப்பாடு வாரியம் நடவடிக்கை எடுக்கலாம். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.