தமிழகம்

‘நல்லகண்ணு... பிறர்க்கென வாழ்ந்த சிறந்த பண்பாளர்!’ - தலைவர்கள் புகழஞ்சலி

செய்திப்பிரிவு

நல்லகண்ணுவின் மறைவு நாட்டுக்கும், தமிழக மக்களுக்கும் பேரிழப்பு என அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அரசியல் கட்சித் தலைவர்கள் கூறியிருப்பதாவது:

ஆளுநர் ஆர்.என்.ரவி: முதுபெரும் அரசியல் தலைவர் இரா.நல்லகண்ணுவின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. எளிமை மற்றும் உறுதியான அர்ப்பணிப்பு உணர்வுடன் பொது சேவைக்காக தனது வாழ்க்கையை அவர் அர்ப்பணித்தார். அவரது மறைவு ஆழமாக உணரப்படும் ஒரு வெற்றிடத்தை விட்டுள்ளது. அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி.

          

எதிர்கட்சி தலைவர் பழனிசாமி: ஜெயலலிதாவின் பேரன்பை பெற்றவரும், அனைவரிடத்திலும் அன்போடும், பாசத்தோடும் பழகக்கூடியவருமான நல்லகண்ணு, தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதற்காக பல்வேறு போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வெற்றி கண்டார். தனக்கென வாழாமல், பிறர்க்கென வாழ்ந்த சிறந்த பண்பாளர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்சில் நல்லகண்ணு உடல் எடுத்துச் செல்லப்பட்டபோது கை உயர்த்தி கோஷமிட்டு வீரவணக்கம் செலுத்திய தொண்டர்கள்.

இந்திய கம்யூ. கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா: கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்ட நாளிலேயே பிறந்து, வளர்ந்து, நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் அயராது பாடுபட்டவர். தன்னுடைய சுய நலன்களை பாராமல், சுக துக்கங்களை பாராமல் மக்கள் நலனுக்காகவும் நாட்டு நலனுக்காகவும் அயராது பாடுபட்டவர். மிகப்பெரிய போராளி, புரட்சியாளர். நல்லகண்ணுவின் மறைவு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு பேரிழப்பு.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்: நாம் வாழ்ந்த காலத்தில் அரசியலின் முன்னுதாரணமாக, இன்றைய இளைஞர்களுக்கும் எடுத்துக்காட்டான தலைவராக வாழ்ந்திருக்கிறார்.

மருத்துவமனைக்கு வந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், நயினார் நாகேந்திரன்

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்: அரசு எப்போதெல்லாம் அவருக்கு நிதி கொடுக்கிறதோ அப்போதெல்லாம் அதை அரசுக்கே திருப்பி கொடுத்தவர். அவரது மறைவு தமிழ் சமுதாயத்துக்கு பேரிழப்பு.

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: சுதந்திர போராட்ட வீரர் நல்லகண்ணுக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: தன் வாழ்நாள் முழுவதும் ஏழை எளிய மக்களுக்காக, உழைக்கும் மக்களுக்காக, தன் வாழ்வை அர்ப்பணித்து வாழ்ந்த தியாகச்சுடர் நல்லகண்ணுக்கு மதிமுக சார்பில் வீரவணக்கம்.

மருத்துவமனைக்கு வந்த இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சி.மகேந்திரன்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லாத மக்கள் தலைவர். அவரது இழப்பு கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டுமல்ல தமிழகத்துக்குகே பேரிழப்பு.

விசிக தலைவர் திருமாவளவன்: நல்லகண்ணுவால் அரசியல் களத்தில் ஏற்பட்டிருக்கிற வெற்றிடத்தை காலத்தாலும் நிரப்ப இயலாது.

நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்: மாபெரும் தலைவரை, மகத்தான மாமனிதரை இந்த நாடு இழந்திருக்கிறது. மண்ணுக்கும் மக்களுக்கும் அரும்பாடாற்றியவர்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: தூய்மையான அரசியலிலும், மக்கள் சேவையிலும் சிறந்து விளங்கிய நல்லகண்ணுவின் மறைவு இந்திய அரசியலுக்கும், நாட்டுக்கும் பேரிழப்பு.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: மக்களுக்கு தொண்டு செய்வதையே தொழிலாக கொண்ட மனிதப் புனிதர் நல்லகண்ணுவின் இடத்தை இனி யாராலும் நிரப்ப முடியாது.

பாமக தலைவர் அன்புமணி : இந்திய விடுதலைப் போராட்டத்திலும், விடுதலைக்குப் பிறகு பொதுவுடைமை இயக்கத்திலும் ஈடுபட்டதற்காக பல ஆண்டுகளை சிறையில் கழித்தவர்.

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா: நேர்மையான அரசியல்வாதியாக தன்னை நிலைநிறுத்தியவர். பொதுமக்களின் நலனுக்காக போராடிய அவரது சேவை என்றும் நினைவுகூரப்படும்.

அஞ்சலி செலுத்தும் விஜய்.

தவெக தலைவர் விஜய்: நல்லகண்ணுவின் இழப்பு, இந்த நாட்டுக்கும் கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்களுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் பெ.சண்முகம்: நல்லகண்ணு மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது செவ்வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறது.

ஸ்ரீவைகுண்டத்தில் நல்லகண்ணு படித்த ஸ்ரீகுமரகுருபரர் சுவாமிகள் மேல்நிலைப்பள்ளியில் அவரது திருவுருவ படத்துக்கு ஆசிரியர்கள், மாணவர்கள் மாலை அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்

இதேபோல், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், மநீம தலைவர் கமல்ஹாசன், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஐ.ஜே.கே. தலைவர் ரவிபச்சமுத்து, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் நெல்லை முபாரக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் பொதுச் செயலாளர் முஹம்மது ஷிப்லி, தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், சென்னை பத்திரிக்கையாளர் மன்றம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு உட்பட பல்வேறு தலைவர்கள் அமைப்புகள் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT