கோப்புப் படம்
சென்னை: மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளது. இந்த கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை 2 நாட்களில் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என்று ஊரக வளர்ச்சித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், ஊரக வளர்ச்சித் துறை ஆணையர் வே.அமுதவல்லி அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் தேசத் தந்தை மகாத்மா காந்தி ஜெயந்தி நாளான அக்.2-ம் தேதி காலை 11 மணிக்கு கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டும். சபை கூடும் இடம், நேரம் ஆகியவற்றை கிராம மக்களுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும். ஊராட்சி நிர்வாகம், நிதி செலவினம், குடிநீர் விநியோகம், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம், குளங்கள், ஏரிகள் சீரமைப்பு, ஜல் ஜீவன் திட்டம் உட்பட விவகாரங்களை கூட்டத்தில் விவாதிக்க வேண்டும்.
இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை கிராம செயலர், 2 நாட்களில் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். அதனுடன், கிராம சபைக் கூட்ட விவரங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், ‘குடிமக்கள் பங்கேற்பு’ என்ற புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த செயலியைப் பதிவிறக்கம் செய்து பொதுமக்கள் பயன்பெற விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.
சுதந்திர தினமா? - இதற்கிடையே, கிராம சபைக் கூட்டம் குறித்து ஆட்சியர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், அக்.2-ம் தேதி காந்தி ஜெயந்தி என்று குறிப்பிடுவதற்குப் பதில், சுதந்திர தினம் என தவறுதலாக குறிப்பிடப்பட்டுள்ளது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.