சென்னை: தமிழக அரசின் சட்டம் - ஒழுங்கு துறை தகவல்களை ஆர்டிஐ மூலம் பெறுவதற்கு விலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை, பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து தமிழக அரசு வாபஸ் பெற்றது.
அரசின் பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்கள் தகவல் அறியும் உரிமை சட்டம் (ஆர்டிஐ) மூலம் தகவல்களை பெற்று வரும் சூழலில், சட்டம் - ஒழுங்கு துறைக்கு இதிலிருந்து விலக்கு அளித்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது. மனிதவள மேலாண்மைத்துறை செயலாளர் சி.சமயமூர்த்தி வெளியிட்ட அந்த அரசாணையில், “சாதி மற்றும் மத மோதல்கள், விசாரணை கமிஷன்கள் அமைத்தல், துப்பாக்கிச் சூடு சம்பவங்கள், ரகசிய புலனாய்வு விவரங்கள், குண்டர் சட்டம் உள்ளிட்ட தடுப்புக் காவல் நடவடிக்கைகள் போன்ற அதீத பாதுகாப்பு சார்ந்த விவகாரங்களை இத்துறையால் கையாளப்படுகிறது.
இதனை பாதுகாக்கும் நோக்கில் சட்டப்பிரிவு 24(4)-ன் கீழ் ஆளுநரின் ஒப்புதலுடன், ஆர்டிஐ-யில் இருந்து சட்டம் - ஒழுங்கு துறை தொடர்பான தகவல்களை பெறுவதில் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. உளவு மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் அமைப்பாக அறிவித்து இந்த விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அரசாணைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கைகளில் கூறியிருப்பதாவது: தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர்: வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்யும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் விலக்கு பட்டியலில் பொது (சட்டம் மற்றும் ஒழுங்கு) துறையையும் சேர்த்து விரிவுபடுத்தியிருப்பது கவலைக்குரியது. இத்தகைய விலக்கு, வெளிப்படைத்தன்மையையும் நல்லாட்சியையும் முன்னிறுத்தும் அரசுக்கு உகந்ததாக அமையாது.
பாமக தலைவர் அன்புமணி: ஒரு மாநிலத்தின் அமைதிக்கும், பாதுகாப்புக்கும்சட்டம் - ஒழுங்கு மிகவும் முக்கியமானது. அது குறித்த தகவல்களை பெறும் அடிப்படை உரிமையை மக்களிடமிருந்து தமிழக அரசு பறித்திருப்பது கண்டிக்கத்தக்கது. இந்த அரசாணையை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம்: தமிழக அரசின் இந்த செயல் ஜனநாயகத்துக்கும், வெளிப்படை தன்மைக்கும் எதிரானது. இது அரசியல் சாசனம் உறுதி செய்துள்ள போராட்ட உரிமைகளை நசுக்கும் முயற்சியாகும்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்: தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வரம்பிலிருந்து சட்டம் - ஒழுங்கு துறைக்கு விலக்கு அளித்துள்ளது கண்டனத்துக்குரியது.
இதேபோல் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் தீவிரமடைந்ததை தொடர்ந்து, தமிழக அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்து அரசாணையைத் திரும்ப பெறுவதாக அறிவித்தது. இதுகுறித்து அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “தகவல் அறியும் உரிமைச் சட்டப்பிரிவு 24(4)-ன் கீழ் பொது (சட்டம் - ஒழுங்கு) துறைக்கு விலக்கு அளித்து வெளியிடப்பட்ட தமிழக அரசின் அரசாணை விலக்கி கொள்ளப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
அரசின் இந்த நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி. பிரவீன்சக்கரவர்த்தி, “பிற கட்சிகளின் ஆக்கப்பூர்வமான கருத்துகளுக்குச் செவிசாய்த்து, தேவைப்படும்போது முடிவுகளைச் சரிசெய்து கொள்ளும் துணிச்சலை அரசு வெளிப்படுத்தியுள்ளது” என குறிப்பிட்டு உள்ளார்.